அமைச்சுப் பதவிக்கான அழைப்பை அடியோடு நிராகரித்தார் ஜீவன்!
நாமல் ராஜபக்ச வகித்த இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவியை ஏற்குமாறு அரச தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நிராகரித்துள்ளார் எனத் தெரியவருகின்றது.
எதிர்வரும் 18ஆம் திகதி புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கு எதிர்பார்த்துள்ள அரசு, அதற்கான பெயர்ப்பட்டியலைத் தற்போது தயாரித்து வருகின்றது.
இந்நிலையில், புதிய அமைச்சரவையில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவியை ஏற்குமாறு ஜீவன் தொண்டமானுக்கு அரச தரப்பில் இருந்து தூதனுப்பட்டுள்ளது. அந்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார்.
“மக்கள் பக்கம் நின்றே சுயாதீனமாகச் செயற்படும் முடிவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எடுத்தது. அந்த முடிவில் மாற்றம் இல்லை. இ.தொ.காவின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்தும் சுயாதீனமாகவே செயற்படுவோம்” என்று ஜீவன் தொண்டமான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் எனவும் அறியமுடிகின்றது.