செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்து முதலாளிகளாக மாறிய மக்கள்
செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்தவர்களை முதலாளிகளாக ஆக்கி அழகு பார்த்திருக்கிறது திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்.
வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் வாழ்க்கையை அடமானம் வைத்த ரேகாவின் பெற்றோருக்கு செங்கல் சூளையில் வேலை பார்க்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
செங்கல் சூளையின் ஜுவாலையில் அவர்களது வாழ்வு உருகிக் கொண்டிருந்த போதுதான் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த ரேகா பள்ளி விடுமுறைக்கு ஊருக்கு வந்திருக்கிறார்.
ஆயிரம் கனவுகளோடு சிறகடித்துக் கொண்டிருந்த அந்த சிறுமிக்கு தானும் ஒரு கொத்தடிமையாகப் போகிறோம் என்பது அப்போது தெரியாது.
இரக்கமற்ற செங்கல் சூளை உரிமையாளரால், மீண்டும் பள்ளிக்குச் சென்று விடுவோம் என்ற ரேகாவின் கனவு காவு கொடுக்கப்பட்டது. விவரம் புரியாமலேயே ஒரு விலங்கோடு வளரத் தொடங்கினார் ரேகா.
கொத்தடிமைச் சங்கிலியில் அகப்பட்ட பெண்கள் திருமணம் செய்து கொண்டு போனால் கடன் தீர்க்க முடியாது என கணக்கு பார்க்கும் கல்நெஞ்சக்காரர்கள், தங்கள் பகுதியிலேயே அவர்களுக்குத் திருமணம் முடித்து வைக்கின்றனர். ரேகாவுக்கும் 13 வயதிலேயே திருமணம் ஆனது.
குழந்தையாக இருந்து தான் குழந்தை பெறும் வரை கொத்தடிமையாகவே வாழ்ந்த ரேகாவிற்கும் ஒரு நாள் விடிந்தது. ஆர்டிஓ சோதனையில் அங்கிருந்தவர்கள் கொத்தடிமைகளாக இருந்தது தெரியவர, அனைவரும் மீட்கப்பட்டனர்.
இவர்களது வாழ்க்கையை சீரமைக்க தமிழக அரசு எடுத்த சீரிய முயற்சிகளால், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வீரகநல்லூர் கிராமத்தில் அனைவருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து செங்கல் சூளை அமைக்க உதவியது.
30 குடும்பங்களை சேர்ந்த 200 பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் இந்தப் பணிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
கொத்தடிமையாகத் தாங்கள் பணியாற்றிய செங்கல் சூளையில் தாங்களும் ஒரு முதலாளியாக புதிய வாழ்க்கையின் அடித்தளத்தை அமைக்கத் தொடங்கியுள்ள அந்த மக்கள் ஆனந்தக் கண்ணீர் சிந்துகின்றனர்.