யாழ். மற்றும் களனி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தெரிவுப்பட்டியல் கல்வி அமைச்சுக்கு
யாழ். மற்றும் களனி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தெரிவுப்பட்டியல் ப.மா. ஆணைக்குழுவினால் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைப்பு!
யாழ்ப்பாணம் மற்றும் களணி பல்கலைக்கழகங்களினின் துணைவேந்தர் தெரிவுக்காக அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் பேரவைகளால் முன் மொழியப்பட்டவர்களின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய சுற்று நிருபத்துக்கு அமைவாகக் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கமைவாக களனிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களில் மூன்று பேரது பெயர்கள் கடந்த 10 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற களனிப் பல்கலைக்கழப் பேரவையின் விசேட கூட்டத்தில் முன்மொழியப்பட்டு கல்வி அமைச்சுக்கு அனுப்புவதற்காகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அதே போலவே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களில் மூன்று பேரது பெயர்கள் நேற்று முன்தினம் – 12 ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழப் பேரவையின் விசேட கூட்டத்தில் முன்மொழியப்பட்டு கல்வி அமைச்சுக்கு அனுப்புவதற்காகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இன்று காலை கையளிக்கப்பட்டிருந்தன.
இந்த இரு பல்கலைக்கழகப் பேரவைகளினாலும் முன்மொழியப்பட்டவர்களின் விவரங்கள் இன்று வியாழக் கிழமை இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், புள்ளியிடல் முறமை உள்ளிட்ட நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளனவா என ஆராயப்பட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகளுடன், மூவரின் பெயர்கள் இன்றைய தினமே ஜனாதிபதியின் தெரிவுக்காக கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எனினும், இன்று பிற்பகலில் நியமிக்கப்பட்ட கல்வி அமைச்சின் புதிய செயலாளர் பேராசிரியர் கபில பெரோ தனது கடமைகளைப் பொறுப்பேற்காத காரணத்தினால் – நாளை அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்க இருப்பதனால், நாளை அல்லது எதிர்வரும் திங்கட்கிழமை கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாக இந்தப் பெயர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அறியக் கிடைத்தது.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைவாக ஒவ்வொரு பல்கலைக்கழகத்தினதும் பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜனாதிபதி நியமனம் செய்வார். அநேகமாக அடுத்து வரும் வாரங்களில் ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வேளை –
கடந்த வருடம் மே மாதம் முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குத் தகுதி வாய்ந்த அதிகாரியாகப் பேராசிரியர் க. கந்தசாமி, மூன்று மாதங்களுக்கொரு முறை நியமனம் புதுப்பிக்கப்பட்டு கடந்த 6 ஆம் திகதியுடன் அவரது நியமனம் நிறைவுக்கு வந்திருந்த போதிலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, துணைவேந்தரின் கடமைகளை ஆற்றுமாறு கடந்த 10 ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரினால் கடிதம் மூலம் கேட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Comments are closed.