தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கோடை மழை கொட்டித்தீர்த்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களி 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில், சுற்றுலா தலமான ஏற்காடு மற்றும் அதன் சுற்று வட்டார மலை கிராமங்களில், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக, கனமழை பெய்தது. குறிப்பாக, ஏற்காடு சேர்வராயன் கோயில் பகுதிகளில், ஆலங்கட்டி மழை கொட்டியது. இதனால், ஏரி பூங்கா மற்றும் படகு இல்லம் பகுதியில் சாலைகளை மூழ்கடித்தவாறு, வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் விடுமுறை காரணமாக, ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.

இதேபோல, தருமபுரி மாவட்டத்தில் அரூர், அதியமான்கோட்டை, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. இதில், அதிகபட்சமாக, நல்லம்பள்ளியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால், மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால், மழைநீர் முழுவதும் அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்ததாக, பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலையில் வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, ஆனந்தகிரி, செண்பகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதேபோல, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒருமணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோடை வெயிலுக்கு இதமாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி. காரைக்காலில் ஒருசில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.