திருநங்கைகளுக்கு இந்த ஆண்டுக்குள் ஓய்வூதிய திட்டம்: புதுச்சேரியில் திருநங்கையர் தின விழாவில் அமைச்சர் உறுதி
புதுச்சேரியில் திருநங்கையர் தின விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமூக நலத்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் சாதனை புரிந்து சிறந்து விளங்கிய திருநங்கைகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து, விழாவில் பேசிய அமைச்சர், பதுச்சேரியில் கொரோனா கால விடுமுறைக்கு பின்பு இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் திருநங்கையர் தின விழா நடத்தப்படுகிறது என்றார்.
முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் பாகுபாடின்றி ஆட்சி செய்து வருகிறது என்றும், இந்த ஆண்டு முதல் திருநங்கைகளுக்கு முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த சமூகத்தில் ஒதுக்கப்பட்ட அவர்களை நாம் தான் மதிக்க வேண்டும், அவர்களின் திறமையை வெளிப்படுத்த நாம் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பல துறைகளில் திருநங்கைகள் சாதனை படைத்து வருகிறார்கள் என்று தெரிவித்த அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் அனைத்து தரப்பு மக்களுக்கும் முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சி பாதுகாப்பாக இருக்கும் என்றார்.
இதனையடுத்து திருநங்கைகளின் கலைநிகழ்ச்சிகளான பரதநாட்டியம், கரகாட்டம் , மயிலாட்டம், ஒயிலாட்டம், நாட்டுப்புற நடனம், மற்றும் இசை கச்சேரி, கவிதை வாசித்தல், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிகளை திருநங்கைகளுடன் அமர்ந்து அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் கண்டு ரசித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி முதல்வர் சித்ராதேவி, வேலூர் 36-வது வார்டு உறுப்பினர் திருநங்கை கங்கா நாயக், மற்றும் சமூக நலத்துறை இயக்குனர் முத்துமீனா, திட்ட இயக்குனர் சித்ராதேவி, திருநங்கைகள் தலைவி சீத்தல், மற்றும் சட்ட உதவி மையம் நீதிபதி சோபனா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.