அசாமில் கடும் மழை வெள்ளம் – 20,000 பேர் பாதிப்பு, 8 பேர் உயிரிழப்பு

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பால் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் கடந்த இரு நாள்களாக பெய்த கனமழை காரணமாக எடடு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 592 கிராமங்கள் வெள்ள நீரால் சூழந்துள்ளது.

இது தொடர்பாக அசாம் மாநில பேரிடர் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள திங்கோங் பகுதியில் நான்கு பேரும், பார்பேட்டா பகுதியில் மூன்று பேரும், கோல்பாரா பகுதியில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

கோல்பாரா, பார்பேட்டா, திப்ரூகர், காம்ரூப், நல்பரி, சிராங், தர்ராங், கோலாகாட், உடால்குரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 592 கிராமங்களில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடும் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கோங் பகுதியில் மரங்கள் வேரோடு பிடுங்கி விழுந்ததில் சிறுமி உள்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கோபால்பாரா மாவட்டத்தின் மட்டியா பகுதியில் 15 சிறுவன் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் சுமார் 6 ஆயிரம் வீடுகள் பாதி அளவிலும், 900 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் வரும் 20 ஆம் தேதி வரை இந்த கன மழை தொடரும் என மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மழை வெள்ள பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது.

2020ஆம் ஆண்டில் வெள்ளத்தின் காரணமாக சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக, பிரம்மபுத்திரா நதியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தி, பேரிடர் பாதிப்பை தவிர்க்க நீண்ட கால திட்டத்தை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.