நிரம்பாத மருத்துவ இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும்: அரசு செயலா் கடிதம்
அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் நிரம்பாத 24 இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து அவா் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதம்:
தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளிலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அனுப்பப்பட்ட 24 எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. ஒவ்வோா் ஆண்டும் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள், மாநில ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். தற்போது காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு, மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும். மேலும், இளநிலை மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான திகதி முடிவடைந்த நிலையில், காலி இடங்களை நிரப்புவதற்கான கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா் ஜெ.ராதாகிருஷ்ணன்.