வரலாற்று சாதனைப் படைத்த உம்ரான் மாலிக்!
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் உம்ரான் மாலிக் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. கேப்டனாக களமிறங்கிய ஷிகர் தவான், இன்று பஞ்சாப் அணிக்காக அதிக ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
மாயங் அகர்வால் காயம் காரணமாக விலகியதால், சிம்ரன்சிங் தொடக்க வீரராக களமிறங்கினார். போட்டி தொடங்கியதும், முதல் ஓவரில் புவனேஸ்வர் குமார் ஒரு பவுண்டரி உள்பட 6 ரன்களை விட்டு கொடுத்தார். இதனை தொடர்ந்து யான்சென் கட்டுகோப்பாக பந்துவீசி 2வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே அவர் விட்டு கொடுத்தார். ஆனால் அடுத்த ஓவரிலே புவனேஸ்வர் குமார் ஷிகர் தவான் விக்கெட்டை சாய்த்தார்.
இதனை தொடர்ந்து நடராஜன் பந்துவீச்சில் ஷிம்ரன்ஜித் சிங் தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாச அடுத்த பந்திலேயே டிஆர்எஸ் விதியால் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பாரிஸ்டோ, லிவிங்ஸ்டோன் கூட்டணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.
குறிப்பாக லிவிங்ஸ்டோன் 26 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
பாரிஸ்டோ 12 ரன்களில் ஆட்டமிழக்க, லிவிங்ஸ்டோன் 33 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். ஜித்தேஷ் சர்மா, ஷாரூக்கான் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஷாரூக்கான் 26 ரன்களிலும், ஓடியன் ஸ்மித் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி 5 ஓவரில் ரன் குவிக்கலாம் என்ற பஞ்சாப் அணியின் கனவுக்கு உம்ரான் மாலிக் வேட்டு வைத்தார்.
20வது ஓவரை வீசிய உம்ரான் மாலிக், அசுர வேகத்தில் பந்துவீசினார். முதல் பந்தில் டாட் , 2வது பந்தில் விக்கெட் வீஙழந்தது. இதே போன்று 3வது பந்தும் டாட், அடுத்த பந்து பேட்ஸ்மேன் கிளின் போல்ட் ஆனார். இதே போன்று உம்ரான் மாலிக் வீசிய 5வது பந்திலும் பேட்ஸ்மேனின் ஸ்டம்ப் வாக்கிங் சென்றது.
கடைசி பந்தில் ரன் அவுட் என ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்ந்தது. இதன் மூலம் ஒரு ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ரன் விட்டுகொடுக்காமல் மெய்டன் வீசிய ஒரே வீரர் என்ற பெருமையை உம்ரான் மாலிக் படைத்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.