ஒரே ஓவரில் நான்கு விக்கெட்… சாஹலின் சுழலில் சிக்கி சின்னாபின்னமான கொல்கத்தா.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.
15வது ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியான இன்றைய போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
மும்பை Brabourne மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 103 ரன்களும், சஞ்சு சாம்சன் 38 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான ஆரோன் பின்ச் 58 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் களத்திற்கு வந்த கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நிதிஷ் ராணா (18), ரசல் (0), வெங்கடேஷ் ஐயர் (6) போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், போட்டியின் 17வது ஓவர் தாக்குபிடித்த ஸ்ரேயஸ் ஐயர் 85 ரன்கள் எடுத்த போது சாஹலின் சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்தார். ஸ்ரேயஸ் ஐயருக்கு பிறகு களத்திற்கு வந்த சிவம் மாவி மற்றும் பாட் கம்மின்ஸை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றிய சாஹல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதோடு, ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
இதன்பின் களத்திற்கு வந்த உமேஷ் யாதவ் யாருமே எதிர்பார்க்காத வகையில், டிரண்ட் பவுல்ட் வீசிய போட்டியின் 18வது ஓவரில் 2 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி அடித்ததன் மூலம் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 19வது ஓவரை வீசிய பிரசீத் கிருஷ்ணா அந்த ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்ததால், கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையை கொல்கத்தா அணி சந்தித்தது.
போட்டியின் கடைசி ஓவரை வீசிய அறிமுக வீரரான ஓபட் மெக்காய் தனது சாமர்த்தியமான பந்துவீச்சின் மூலம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக சாஹல் 5 விக்கெட்டுகளையும், மெக்காய் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.