இந்தியாவுக்கு திடீர் விசிட் அடிக்கும் பிரிட்டன் பிரதமர்..! பின்னணி என்ன?
இந்திய நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகை தருகின்றார். அவரது பயணத்தின்போது, இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு ஐரோப்பாவுக்கு வெளியே பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாக அவரது இந்திய வருகை அமைகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அந்நாட்டை நம்பியிருக்கும் போக்கை குறைக்குமாறு இந்தியாவை பிரிட்டன் வலியுறுத்தி வருகிறது.
கடந்த மாதம், டெல்லி வந்த பிரிட்டன் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க இந்தியாவை வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், இந்தியா வரும் போரிஸ் ஜான்சன், குஜராத் செல்கிறார். குஜராத்தில் முதலீடு செய்வது குறித்தும் அறிவியல், சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் ஒத்துழைப்பு திட்டங்களையும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தொழில் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் போரிஸ் ஜான்சனை பிரதமர் மோடி அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் உக்ரைன் ரஷ்யா போர், ஆப்கானிஸ்தான் நிலவரம், உலக அளவிலான பயங்கரவாத அச்சுறுத்தல் ஆகியவை குறித்தம் இரு பிரதமர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். பிரிட்டன், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகத்தில் ஈடுபட முயற்சித்து வருகிறது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் பட்சத்தில், இந்தியாவுக்கும் பிரிட்டனுக்குட் இடையேயான வர்த்தகம், 2035 ஆண்டு முதல் ஆண்டுக்கு 2 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்.
இந்திய பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள போரிஸ் ஜான்சன், எதேச்சதிகார அரசுகளிடமிருந்து மிரட்டல்கள் வரும் போது, ஜனநாயக நாடுகள் கைகோர்ப்பது அவசியம் என கூறியுள்ளார்.