கடத்தல் தொழிலில் போட்டி.. தூத்துக்குடியை அதிரவைத்த மீனவர் கொலை – நண்பர்கள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்
தூத்துக்குடியில் மாவட்டம் திருச்செந்தூர் அருகே கடத்தலில் ஏற்பட்ட போட்டி காரணமாக ஆலந்தலை காட்டுப்பகுதிக்குள் மீன்பிடி தொழிலாளியின் தலை, கை, கால்களை தனித்தனியே வெட்டிக் கொடூரமாக கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களும், மஞ்சள் களைக்கொல்லி மருந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் தொடர்ந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். திருச்செந்தூர் பகுதியில் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் இந்த கடத்தல் தொழிலில் ஈடுபடுவதால் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இலங்கையில் கடும் பொருளாதாரா நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் தேவை அதிகளவில் இருப்பதால் இதுபோன்ற கடத்தல் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து இலங்கைகக்கு பொருட்களை கடத்திச்செல்வதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த மீன்பிடித்தொழிலாளி மதன்குமார்(21). திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை பகுதியில் லயோ(30) என்பவருடன் சேர்ந்து மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் லயோ அவரது நண்பர்களான தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த மதன்குமார், மரிய அந்தோணி, தாளமுத்து நகரைச் சேர்ந்த மல்லையா என்ற முத்துமல்லை ராஜ் ஆகியோர் கடந்த திங்கள்கிழமை இரவு ஆலந்தலை அருகே மறவன்விளைக்கு செல்லும் காட்டுப்பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர். அங்கு பேசிக்கொண்டிருக்கும் போது அவர்களுக்குள் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் மதன்குமாரை மூவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை தலை , மற்றும் கை , கால்களை தனித்தனியே வெட்டி பெட்ரோல் ஊற்றி எரிந்துள்ளனர். ஆனால் சரியாக எரியாததால் அங்கு மண்ணை தோண்டி புதைத்துவிட்டனர். பின்னர் லயோ, அவரது நண்பர்கள் மூவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதுகுறித்து நள்ளிரவு போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. தாலுகா போலீசார் ஆலந்தலை பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
சம்பவம் தொடர்பாக லயோ, மல்லையா என்ற முத்துமல்லைராஜ், மரிய அந்தோணி ஆலந்தலையைச் சேர்ந்த ராஜா, ஜாக்சன், ஆகியோரை போலீசார் பிடித்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தல் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாகவும் , போலீசாரிடம் தகவல் தெரிவித்ததன் காரணமாகவும் ஏற்பட்ட மோதலில் காட்டுப்பகுதியில் மது அருந்தும் போது லயோ அவரது நண்பர்கள் மல்லையா என்ற முத்துமல்லைராஜ், மரிய அந்தோணி ஆகியோர் மதன்குமாரை சேர்ந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
மேலும் இந்த கொலைக்கு பின்னணியாக ஆலந்தலையை சேர்ந்த திமுக பிரமுகர் ராஜா மற்றும் ஜாக்சன் என ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தநிலையில் நேற்று கொலையில் தொடர்புடைய லியோவை ஏடிஎஸ்பி கார்த்திகேயன், ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தனர். மதன்குமார் உடல் புதைக்கப்பட்ட இடத்தை லயோ அடையாளம் காட்டினார்.திருச்செந்தூர் தாசில்தார் சாவாமிநாதன் முன்னிலையில் உடலை தோண்டி எடுக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
தடய அறிவியல் வல்லுனர்கள் இரத்தம் மற்றும் மண் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். கடத்தல் விவகாரம் தொடர்பாக நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் மீனவர் ஒருவரை தலை மற்றும் கை, கால்களையும் , உடல் உறுப்புகளையும் தனித்தனியே வெட்டி எடுத்து புதைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.