மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்: தெலுங்கானா அரசு அதிரடி அறிவிப்பு
முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பல அலைகளை உருவாக்கியது. இந்தியாவில் கொரோனா முதல் அலைக்கு பின் டெல்டா வைரஸின் இரண்டாவது அலை உருவானது. டெல்டா வைரஸ் தான் இந்தியாவில் பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது.
அதன்பின் ஒமைக்ரான் இந்தியாவில் 3வது அலையை ஏற்படுத்தியது. ஒமைக்ரான் அதிகம் பரவினாலும் இதனால் உயிரிழப்பு என்பது குறைவாகவே இருந்தது. இதனால் ஒமைக்ரான் பரவல் மார்ச் மாதத்தில் குறைந்து வந்தது.
இந்நிலையில், டெல்லி, கேரளாவில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நான்காவது அலையின் வருகை தவிர்க்க முடியாதது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதைத்தொடர்ந்து, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை அடுத்து முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற விதிமுறை மீண்டும் அமலுக்கு வருகிறது. முதலாவதாக டெல்லி அரசு இந்த விதிமுறையை மீண்டும் அமல்படுத்தியுள்ளது.
டெல்லியில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், மீறும் பட்சத்தில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது தெலுங்கானா மாநிலத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, மாநிலத்தில் தினசரி பாதிப்பானது 20 முதல் 30 வழக்குகள் வரை பதிவாகி வருகிறது.
இதையடுத்து, தெலுங்கானாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படவில்லை என்றும், முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.