மோசடி வழக்கு: பிரபல நடிகை ஜீவிதா ராஜசேகருக்கு ஜாமீனில் வெளிவர இயலாத பிடிவாரண்ட் பிறப்பிப்பு..
திரைப்பட நடிகை ஜீவிதா ராஜசேகருக்கு மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவர இயலாத படிவாரண்ட் பிறப்பித்து நகரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்ற நடிகர் ராஜசேகர். அவருடைய மனைவி நடிகை ஜீவிதா. 2017 ஆம் ஆண்டு பிஎஸ்வி கருட வேக என்ற பெயரிலான தெலுங்கு திரைப்படம் திரைக்கு வந்தது. அந்த திரைப்படத்தில் ராஜசேகர் உள்பட பலர் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் பிஎஸ்வி கருட வேக சினிமாவை தயாரித்த ஜோஸ்டார் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹேமா நகரி காவல்நிலையத்தில் ஜீவிதா மீது பணமோசடி புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் திருவள்ளூரில் தங்களுக்கு சொந்தமாக இருக்கும் நிலத்தை அடமானமாக வைத்து ரூ.26 கோடி பணம் வாங்கிக்கொண்டு ஜீவிதா பணத்தை திருப்பி கொடுக்காமல் தங்களை ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக நகரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையை ஏற்று கொண்ட நீதிமன்றம் ஜீவிதா மீது ஜாமீனில் வெளிவர இயலாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக திருப்பதியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹேமா, ஜீவிதா ராஜசேகர் ஆகிய இரண்டு பேரும் மிகவும் நல்லவர்கள் போல் சமூகத்தில் நடமாடி கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் எங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காத காரணத்தால் நாங்கள் தொழில் நடத்த இயலாத நிலையில் இருக்கிறோம். ஜீவிதாவை நம்பவே கூடாது. இந்த வழக்கில் ராஜசேகர் விரைவில் சிறைக்கு செல்வார் என்று கூறினார்.