மாவை சேனாதிராசாவை நியமனம் செய்யுமாறு கோரியமை தொடர்பாக சில கருத்துக்கள் பரப்பப்படுகிறது : சீ.வீ.சிவஞானம்
மாவை சேனாதிராசாவை நியமனம் செய்யுமாறு கோரியமை தொடர்பாக சில கருத்துக்கள் பரப்பப்படுகிறது :
ஊடக அறிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் தொடர்பாக நானும் திரு.கனகசபாபதி அவர்களும் திருகோணமலைக்குச் சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் அவர்களைக் கடந்த 08.08.2020 ஆம் திகதி சந்தித்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் திரு. மாவை சேனாதிராசா அவர்களை நியமனம் செய்யுமாறு கோரியமை தொடர்பாக சில விசமத்தனமான கருத்துக்கள் பரப்பப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.
இந்த முயற்சி ஏதோ எமது தனிப்பட்ட நடவடிக்கையாக சித்தரித்து மலினப்படுத்தப்படுகிறது. உண்மையில் இது யாழ்ப்பாண மாவட்டக் கிளையின் நடவடிக்கையாகும்.
பாராளுமன்ற தேர்தல்கள் முடிவு வெளியான பின்பு பலரும் திரு. மாவை சேனாதிராசா அவர்களைச் சந்தித்து கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவர் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்க வேண்டும் என்பதால் தேசிய பட்டியல் ஆசனத்தை அவருக்கு வழங்கும்படி கோரிக்கை விடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் குழுவின் உறுப்பினர்கள் பலர் இது பற்றிக் கலந்துரையாடி இந்தக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் எனவும் முறைப்படியான தீர்மானம் பின்னர் எடுத்து அனுப்பலாம் என்றும் எம்மைக் கோரியதைத் தொடர்ந்து திரு. மாவை சேனாதிராசா அவர்களது சம்மதத்தைப் பெற்றுக் கொண்டே நாம் திருகோணமலைக்குச் சென்றோம். இக்கோரிக்கையை தெரிவித்த பின்பு 09.08.2020 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டக் கிளை முறைப்படியாக கூடி அதனை உறுதிப்படுத்திய தீர்மானம் எடுக்கப்பட்டு கௌரவ இரா.சம்பந்தன் அவர்களுக்கும் பொதுச் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் என்னுடன் இணைந்து கொண்ட திரு.பெ.கனகசபாபதிதான் யாழ்ப்பாண மாவட்டக் குழுவின் தலைவர். அவர் கட்சியின் இணைப் பொருளாளரும் ஆவார். நான் கட்சியின் மூத்த துணைத் தலைவர் என்பதுடன் யாழ்ப்பாண மாவட்டக் கிளையின் ஒரு உறுப்பினர் ஆவேன். ஆகவே இது ஒரு ஜனநாயக கட்டமைப்பின் கோரிக்கையையே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சீ.வீ.சிவஞானம்,
மூத்த துணைத் தலைவர்,
இ.த.அ.க.
Comments are closed.