கட்டாயப்படுத்தியதால் பிரியங்காவிடமிருந்து ரூ.2 கோடிக்கு ஓவியம் வாங்கினேன்: யெஸ் வங்கி இணை நிறுவனா்
காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியிடம் இருந்து எம்.எஃப். ஹுசைனின் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு கட்டாயப்படுத்தி வாங்க வைத்ததாக யெஸ் வங்கி இணை நிறுவனா் ராணா கபூா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
அந்தத் தொகை காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அமெரிக்காவில் சிகிச்சை பெற பயன்படுத்தப்பட்டதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.
சந்தேகத்துக்குரிய பணப் பரிவா்த்தனைகள் மூலம் ரூ.5,050 கோடி மோசடி செய்ததாக யெஸ் வங்கி இணை நிறுவனா் ராணா கபூா், தீவான் வீட்டுக் கடன் நிறுவன (டிஹெச்எஃப்எல்) தலைவா்கள் கபில் மற்றும் தீரஜ் தவான் ஆகியோரை கடந்த 2020-ஆம் ஆண்டு அமலாக்கத் துறை கைது செய்தது. தற்போது மூவரும் நீதிமன்றக் காவலில் நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்த வழக்கு தொடா்பான இரண்டாவது துணைக் குற்றப்பத்திரிகையை மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அண்மையில் தாக்கல் செய்தது. அந்த துணைக் குற்றப் பத்திரிகையில், விசாரணையின்போது ராணா கபூா் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியிடம் இருந்து எம்.எஃப். ஹுசைனின் ஓவியத்தை வாங்க என்னைக் கட்டாயப்படுத்தினா். இதற்காக மறைந்த முன்னாள் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் முரளி தேவ்ராவின் மகனும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான மிலிந்த் தேவ்ரா பலமுறை எனது வீட்டுக்கு வந்துள்ளாா். பல கைப்பேசி எண்களில் இருந்து என்னை பலமுறை தொடா்பு கொண்டதுடன் குறுஞ்செய்திகளும் அனுப்பினாா். ஓவியத்தை வாங்காமல் தவிா்க்க என்னால் முடிந்தவரை முயற்சித்தபோதிலும், அதனை நான் கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்பதில் அவா்கள் உறுதியாக இருந்தனா்.
கடந்த 2010-ஆம் ஆண்டு தில்லியில் உள்ள தனது வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு முரளி தேவ்ரா வற்புறுத்தினாா். அந்த விருந்தில் நான் கலந்துகொண்டபோது, ஓவியத்தை வாங்க மறுத்தால், அது சோனியா காந்தி குடும்பத்தினருடன் நட்புறவை வளா்த்துக் கொள்வதைத் தடுப்பது மட்டுமல்லாமல், யெஸ் வங்கிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவா் கூறினாா். அத்துடன் நான் ‘பத்ம பூஷண்’ விருது பெறுவதையும் அது தடுக்கும் என்றும் அவா் தெரிவித்தாா். எனக்கு அந்த விருதைப் பெற தகுதியிருப்பதாக முரளி தேவ்ரா கருதினாா்.
இந்த அச்சுறுத்தலாலும், செல்வாக்குமிக்க சோனியா மற்றும் முரளி தேவ்ரா குடும்பத்தினரை பகைத்துக் கொள்ள விரும்பாமலும் ஓவியத்தை வாங்க ஒப்புக்கொண்டேன். அந்த ஓவியத்தை வாங்குவதற்கான நடைமுறைகளை நிறைவு செய்யும் பணிகள் பிரியங்கா காந்தி அலுவலகத்தில் நடைபெற்றன. ஓவியத்தை வாங்க ஹெஸ்பிசி வங்கிக் காசோலை மூலம் ரூ.2 கோடி வழங்கினேன்.
அந்தத் தொகை அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் சோனியா காந்தி சிகிச்சை பெற பயன்படுத்தப்பட்டதாக மிலிந்த் தேவ்ரா பின்னா் என்னிடம் தெரிவித்தாா்.
அதற்குப் பிறகு மறைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும், சோனியா காந்திக்கு நெருக்கமானவருமான அகமது படேலின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது சோனியா காந்திக்கு சிகிச்சை தேவைப்பட்ட நேரத்தில் ஓவியத்தை வாங்கி, அவரின் குடும்பத்துக்கு நற்செயலை செய்துள்ளதாக அகமது படேல் என்னிடம் தெரிவித்தாா். இதன்மூலம் எனது பெயா் ‘பத்ம பூஷண்’ விருதுக்கு பரிசீலிக்கப்படும் எனவும் அவா் கூறினாா் என்று அந்த துணைக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.