கடந்த 10 ஆண்டில் நாடு முழுவதும் 17 லட்சம் பேருக்கு HIV பாதிப்பு – RTI மூலம் தகவல்
நாட்டின் எச்ஐவி நோய் பாதிப்பு குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பற்ற உடல் உறவு காரணமாக எச்ஐவி பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனம் (NACO) தெரிவித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த ஆர்வலரான சந்திர சேகர் கவுர் இந்த ஆர்டிஐ தகவலை கோரியுள்ளார்.
இதற்கு NACO அளித்த தகவலின் படி, நாடு முழுவதும் 2011-2021 காலக்கட்டத்தில், 17,08, 777 பேர் பாதுகாப்பற்ற உடல் உறவு காரணமாக எச்ஐவி பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 2011-12 ஆண்டில் நாட்டின் எச்ஐவி பாதிப்பு 2.4 லட்சமாக இருந்த நிலையில், பத்து ஆண்டுகள் கழித்து 2020-21 ஆண்டில் இந்த எண்ணிக்கை 85,268 ஆக குறைந்துள்ளது.
இந்த 10 ஆண்டு காலகட்டத்தில்,அதிகபட்சமாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 3,18,814 பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 2,84,577 பேரும், கர்நாடகாவில் 2,12,982 பேரும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்காவது இடத்தில் தமிழ்நாட்டில் 1,16,536 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.2011-21 ஆண்டு காலத்தில் 15,782 பேருக்கு ரத்தத்தின் மூலமாக எச்ஐவி நோய் பரவியுள்ளது, 4,423 குழந்தைகளுக்கு தாய் மூலம் எச்ஐவி பரவியுள்ளதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது. இந்த புள்ளி விவரப்படி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் எச்ஐவி பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துவருகிறது தெரியவருகிறது.
2020ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி, இந்தியாவில் 23,18,737 பேர் எச்ஐவி பாதிப்புடன் வாழ்த்து வருகின்றனர். இதில் 81,430 பேர் குழந்தைகள் ஆவர். எச்ஐவி பாதிப்பை சரி செய்ய பிரத்தியேக மருந்துகள், சிகிச்சை முறைகள் இல்லாத நிலையில், உரிய மருத்துவ கண்காணிப்புடன் நோயாளிகளின் நலம் பேணப்படுகிறது. இந்திய அரசின் அமைப்பான NACO நாடு முழுவதும் உள்ள எச்ஐவி நோயாளிகளை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளது.