கொரோனா பரவல் அதிகரிப்பு- அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகல் 12 மணி அளவில் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்தபடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் நேற்று முன்தினம் 55 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், நேற்று 72-ஆக உயர்ந்தது. இதையடுத்து, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 404-ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கொரோனா நான்காம் அலை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதையடுத்து, தொற்று பரவலைத் தடுக்க பொது இடங்களில் முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தொற்று பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கலந்துகொள்கிறார்.
இதேபோல, மம்தா பானர்ஜி உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்தும், அரசின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கம் அளிக்கிறார். தொடர்ந்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்துவது குறித்து, பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.