கற்களால் அடிப்பவர்களை பதிலுக்கு செங்கலால் அடியுங்கள் – பாஜக எம்பி சர்ச்சை பேச்சு
மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் ஏப்ரல் 10ஆம் தேதி ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இதில் காவல்துறையினர் உள்ளிட்ட பலர் படுகாயம் அடைந்தனர். குறிப்பாக, கார்கோன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் சௌத்ரி மீது புல்லட் பாய்ந்து படுகாயம் அடைந்தார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்க இரு நபர் ஆணையத்தை மத்திய பிரதேச அரசு அமைத்துள்ள நிலையில், இதுவரை 175 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராம நவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இது போன்ற மோதல்கள் வெடித்தன.
இந்நிலையில், கார்கோன் மக்களவைத் தொகுதியின் எம்பியான பாஜகவைச் சேர்ந்த கஜேந்திர பாடேல் இந்த மோதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். உள்ளூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மக்களிடையே பேசிய கஜேந்திர பாடேல், “ராம நவமி ஊர்வலத்தின் போது ஊர்வலத்தை நீங்கள் மலர் தூவி வரவேற்றிருக்க வேண்டும். மாறாக நீங்கள் கற்களை வீசி தாக்கியுள்ளீர்கள்.
இங்கு திரண்டுள்ள இளைஞர்கள் தங்களின் தாய்மார்கள் சகோதரிகளின் துயரத்தை துடைக்க உறுதி பூண்டுள்ளனர். இது இந்திய நாடு. நாங்கள் மத நம்பிக்கை கொண்டு வாழ்பவர்கள். நீங்கள் கற்களை வீசி தாக்கினால் அதற்கு செங்கற்களை வீசி நாங்கள் பதிலடி தருவோம்” என சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளார்.
அத்துடன் அவர், “இந்தியா, தற்போது பிரதமர் மோடி தலைமையில் பலமான அரசை நடத்திவருகிறது. எனவே, இந்த அரசு சமரசத்திற்கு இடமளிக்காது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நாட்டில் அனைத்து மக்களும் தங்கள் பண்டிகைகளை கொண்டாட உரிமை உள்ளது. அதேவேளை எந்த ஊர்வலத்தையும் கற்களால் தாக்க உரிமை இல்லை. தவறான நோக்கத்துடன் இருப்பவர்களை இந்து மக்கள் ஒற்றுமையுடன் எதிர்த்து நிற்பார்கள்” என்றுள்ளார்.
இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் எம்பி கஜேந்திராவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது. அதற்கு அவர், தான் தவறாக ஏதும் சொல்லவில்லை. நம்மை தாக்குபவர்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் உரிமையை சட்டம் வழங்குகிறது. எனவே, இது போன்ற தாக்குதல் ஏற்பட்டால் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்ற கருத்தில்தான் நான் பேசினேன் என்றுள்ளார்.