பெரும்பான்மை இல்லாவிட்டால் விலகி விடுவேன் எந்தச் சந்தேமும் வேண்டாம் என்கின்றார் மஹிந்த.
“பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என் பக்கம்தான் இருக்கின்றார்கள். பெரும்பான்மையினரின் ஆதரவு எனக்கு இருக்கும் வரை நான்தான் பிரதமர். நாடாளுமன்ற பெரும்பான்மையை நான் வைத்திருக்கும் வரை நான் இப்படித்தான் இருப்பேன். அது அரசமைப்பு ரீதியாக – சட்டரீதியாக எனக்கு உள்ள உரிமை. பெரும்பான்மை ஆதரவு எனக்கு இல்லாவிட்டால் நானாகவே விலகி விடுவேன்.”
இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் ‘காலைக்கதிர்’ நாளிதழுக்கு நேற்று மாலை அவர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
“நாடாளுமன்றப் பெரும்பான்மை எனக்கு இருக்கும் வரை என்னை யாரும் பிரதமர் பதவியில் இருந்து அகற்ற முடியாது. நாடாளுமன்றுக்கு வெளியில் போராட்டம் நடத்தும் மக்களின் குரல் – அவர்களது கோரிக்கை எனக்குக் கேட்கின்றது. அவை பேசித் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள். ஒவ்வொரு அரசு வரும்போதும் மக்கள் போராட்டங்கள் நடக்கும். மக்கள் போராட்டங்களுக்காக அரசுகள் விலகுவது என்றால் எந்த அரசும் இந்த நாட்டில் இருக்க முடியாது.
ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் நடப்பது வழமை. அவற்றின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. ஆனால், அதற்காக ஜனநாயக விரோத முறையில் அரசுகளைக் கலைக்க வேண்டும் என்பதல்ல.
2015 இல் ஜனாதிபதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் முன்னரேயே, உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து புறப்பட்டு விட்டேன். ஜனநாயகத்துக்கு முரணான வகையில் பதவியைப் பிடித்து வைத்திருக்கும் எண்ணம் எனக்குக் கிஞ்சித்தும் கிடையாது. ஆனால், இப்போது ஜனநாயக ரீதியில் பெரும்பான்மை என் பக்கம்தான் உள்ளது. ஆகவே, நான் பிரதமராகப் பதவியில் நீடிப்பேன். அது மக்கள் தீர்ப்பு.
சம்பந்தப்பட்டோர் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்துவோர் எங்களோடு பேசலாம். பேசித் தீர்ப்பதற்கான வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் கோருகின்றேன்” – என்றார்.