தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு கூட்டமைப்பு அழைப்பு சுமந்திரன் எம்.பி. அறிக்கை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசைப் பதவி விலகுமாறு கோரி நாடளாவிய ரீதியில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் பங்குகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசைப் பதவி விலகக் கோரி தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டத்துக்குத் தமது ஒத்துழைப்பை வழங்கும் முகமாக நாளை (28) ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
இதற்கு ஆதரவைத் தெரிவித்து அரசுக்குத் தொடர்ச்சியான அழுத்தத்தை வழங்கும் முகமாகவும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்குகொள்ளுமாறு அனைத்துத் தொழிற்சங்கங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டி நிற்கின்றது” – என்றுள்ளது.