இன்று காலி முகத்திடலில் ஆரம்பமாகியிருப்பது பிரெஞ்சுப் புரட்சியின் மறுவடிவமா?
தற்போது இலங்கையின் காலிமுக மைதானத்தில் ஒரு அகிம்சை புரட்சி ஆரம்பமாகியுள்ளது. Ghaul என்பது பிரான்சுக்கு வரலாற்றில் சூட்டப்பட்ட பெயர்.இலங்கையில் தற்போது நடைபெற்று வருவதும் புரட்சி பிரெஞ்சு புரட்சியை ஒத்தது. பிரெஞ்சுப் புரட்சிக்கும் காலிமுக மைதான புரட்சிக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்ப்போம்.
01: ஒரு நடுத்தர வர்க்க புரட்சி.
அன்றைய பிரெஞ்சுப் புரட்சிக்கு தலைமை தாங்கியவர்களில் சிலரைப் பார்ப்போம். அவர்களில் இருவர் வழக்கறிஞர்கள். அதாவது டான்டன் மற்றும் ரோபஸ்பியர். மற்றொரு நபர் மராட். அவர் ஒரு மருத்துவர் மற்றும் நன்கு அறியப்பட்ட விஞ்ஞானி. அதுமட்டுமல்லாமல் நியூட்டனின் விதிகளின் குறைகளைக் கூட கண்டுபிடிக்கும் வல்லமை படைத்தவர்.
பிரெஞ்சுப் புரட்சியானது ரஷ்யாவிலோ அல்லது சீனாவிலோ இருந்தது போல் தொழிலாளர்களின் மற்றும் ஒடுக்கப்பட்ட புரட்சி அல்ல. அதன் முக்கியத்துவம் என்னவென்றால், நடுத்தர வர்க்கத்திற்கு உண்மையைப் புரிந்து கொள்ள மார்க்சியம் அல்லது மாவோயிசம் போன்ற எளிய கோட்பாடுகள் தேவையில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என பார்க்கிறார்கள். நடுத்தர வர்க்கப் புரட்சியை எளிதில் அடக்கிவிட முடியாது. அவர்கள் கோபத்தை வெளிப்படுத்திவிட்டு வீடுகளுக்கு செல்வோரல்ல, அவர்கள் எதிர்காலத்தைப் பற்றிய நல்ல பார்வை கொண்டவர்களானவர்களாக வாழ்பவர்கள் . தற்போது நடக்கும், காலிமுக மைதான புரட்சிக்கும், பிரெஞ்சு மக்கள் புரட்சிக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன.
02: பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல்
1789 வாக்கில், பிரான்சின் மன்னர் லூயிஸ் XVI சாதாரண மக்களின் துயரங்களிலிருந்து வெகு தொலைவில் வாழ்ந்த ஒரு மன்னராக இருந்தார். அன்றைய காலத்தில் மக்களுக்கு சாப்பிட ரொட்டி கூட இல்லை. “ரொட்டி சாப்பிட முடியாவிட்டால், கேக் சாப்பிடுங்கள்” என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அது லூயிஸ் XVI மன்னரின் ராணி சொன்ன லரு வார்த்தை. அப்போது அரசு பெரும் கடனில் இருந்தது. ஆனால் அந்தக் கடனை அடைக்க பணம் வைத்திருந்தவர்களிடம் வரி விதிக்கப்படவில்லை.
இதன் விளைவாக, பணக்கார கத்தோலிக்க மதத் தலைவர்களும் பணக்கார பிரபுக்களும் வரி செலுத்தவில்லை. உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மட்டுமே வரி விதிக்கப்பட்டது. அப்படியானால் இந்தப் புரட்சிக்கும் பிரெஞ்சுப் புரட்சிக்கும் எத்தனை ஒற்றுமைகள்? இன்றைய அரசாங்கம் , தனது கூட்டாளிகளுக்கு உதவியாக அவர்களின் வரிகளை 20% ஆக குறைத்துள்ளது. வரிகள் முன்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% முதல் 8% வரை குறைக்கப்பட்டது. பணக்காரர்கள் வரி செலுத்தவில்லை. ஏழைகள் வரி செலுத்தினர். இதனால் அரசு நிதி நெருக்கடியில் சிக்கியது. அவ்வளவு தானா? மற்றொரு மதிப்புமிக்க ஒற்றுமையும் உள்ளது.
03: மக்கள் இறையாண்மை ஒழிப்பு
அப்போது பிரான்சின் எஸ்டேட் ஜெனரல் மூன்று பகுதிகளைக் கொண்டிருந்தது. தேவாலயத்தில் மற்றும் பணக்காரர்களுக்கு 66% பிரதிநிதித்துவம் இருந்தன . சாதாரண மக்கள் 30% மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியதாக இருந்தது. ஆனால் இந்த நாடாளுமன்றம் கூட 175 ஆண்டுகளாகக் கூட்டப்படவில்லை. அதாவது, அரசன் பாராளுமன்றத்தைக் கூட்டாது , முடக்கிவிட்டான். அதுபோலத்தானே நமது பாராளுமன்றமும் உள்ளது? அதாவது பெயரளவில் ஜனாதிபதியின் சார்பாக கையை தூக்கும் ஒரு நிறுவனமாகத்தான் நமது பாராளுமன்றமும் இயங்குகிறது. அப்படி இல்லையா?
04: தொடர்பாடல் புரட்சியைத் தொடங்குதல்
அக்காலத்தில் பிரான்சில் பலருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் 1789 வாக்கில் எழுத்தறிவு எட்டப்பட்டது. இக்காலத்தில்தான் செய்தித்தாள்கள் அச்சிடும் நிலை ஆரம்பிக்கப்பட்டன. அந்த நாட்களில் மார்ட் தனது தொழிலைத் தவிர்த்து செய்தித்தாள்களை அச்சிட்டு மக்களுக்கு உண்மையைச் சொன்னார். அது புரட்சிக்கு பெரும் ஆதரவாக இருந்தது.
இன்று நம் நாட்டில் செய்தித்தாள்கள் மூலம் புரட்சி நடப்பதில்லை. சமூக ஊடகங்கள் மூலம் நடக்கின்றன. இன்று நம் நாட்டில் சமூக ஊடகங்கள் மூலமான ஒரு புரட்சியாக மாறியுள்ளது. பிரெஞ்சுப் புரட்சி ஒரு அகிம்சை புரட்சியாகத் தொடங்கி வன்முறை புரட்சியாக மாறியது. அதற்குக் காரணம் லூயிஸ் மன்னன் தனது அரச பதவியை விட்டுக்கொடுக்காததுதான்.
இறுதியில் அவரும் அவரது அரச குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். பரஸ்பர சந்தேகத்தின் காரணமாக புரட்சியை நடத்தியவர்கள் கூட பின்னர் கொல்லப்பட்டனர். இது நெப்போலியன் ஆட்சிக்கு வர வழிவகுத்தது. இந்தப் புரட்சியைச் செய்யும் உங்களுக்கு என் அறிவுரை, போராடுங்கள். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை போராடுங்கள். ஆனால் மறந்துவிடாதீர்கள், கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதற்காக மட்டும் அல்ல , நீங்கள் இந்தப் புரட்சியைச் செய்கிறீர்கள். அதற்கு மேல் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும்.
அதாவது, இதற்குப் பிறகு எந்த ஒரு தனிநபரோ அல்லது குடும்பமோ இவ்வளவு அதிகாரத்தைப் பெற அனுமதிக்காதீர்கள். கோட்டா வீட்டுக்குப் போவது போல், ஜனாதிபதி எனும் பதவியும் இல்லாது ஒழுிய வேண்டும். மக்களின் இறைமையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றம் அதிகாரமளிக்கப்பட வேண்டும். மேலும், அந்த பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு , கையை உயர்த்தும் அயோக்கியர்களை அகற்ற பாராளுமன்றத்தை கோருங்கள். மேலும், ஒவ்வொரு எம்.பி. மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துக்கள் மற்றும் வருமானங்களை ஆராயுமாறு வலியுறுத்துங்கள்.
அவாகளது சொத்துகள் முறைகேடாக பெறப்பட்டது என கண்டுபிடித்தால் அவர்களை தண்டிக்க கட்டாயப்படுத்துங்கள். தற்போது நடைமுறையில் உள்ள விருப்பு வாக்கு முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். இதுதான் இந்த அடிப்படை பணம் கொடுக்கும் லஞ்ச கலாச்சாரத்தை கொண்டு வந்தது. இப்படித்தான் ராஜபக்சக்கள் தங்கள் இலக்குகளை அடைய பணக்காரர்களை அழைத்து வந்தனர். ஜே.ஆரின் அரசியலமைப்பே அந்த கலாச்சாரத்திற்கு வழிவகுத்தது. அவரே அரசியல்வாதிகளை வியாபாரம் செய்ய அனுமதித்தவர். ஜே.ஆரின் ஆவி இப்போது தன் தந்திரத்தை புன்னகையுடன் பார்க்கிறதூ? கண்ணீர் மல்குகிறதா?
இப்போராட்டத்தை வெல்லலாம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பிரெஞ்சுப் புரட்சி வெற்றியடைய 3 ஆண்டுகள் ஆனது என்பதை நினைவில் கொள்ளுங்கள். புரட்சி 1789 வசந்த காலத்தில் தொடங்கி 1792 வசந்த காலம் வரை நீடித்தது. ஏனென்றால், நாடாளுமன்றத்தில் (எஸ்டேட்) கும்பல் ஓரங்கட்டப்படுவதற்கு இவ்வளவு காலம் பிடித்தது. நம் நாட்டிலும் அப்படித்தான் நடக்கிறது.
இவ்வளவு செல்வந்தராகவும், பலசாலியாகவும் இருக்கும் ராஜபக்ச குடும்பம் இன்னும் இரண்டு வாரங்களில் ஆட்சியை விட்டுக்கொடுத்து விலக மாட்டார்கள். நான் முன்பு சொன்ன மற்றொன்று பிரெஞ்சுப் புரட்சிக்கான முழக்கம் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம். அப்படியென்றால், இனம், மதம், மொழி என வர்க்கங்களால் பிரிந்து கிடக்கும் நமக்கும் எல்லா இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையிலான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது நல்ல முழக்கம் அல்லவா?
இறுதியாக, பிரெஞ்சுப் புரட்சியின் போது வேறு ஒன்று நடந்தது. அதாவது, தேவாலயம் அதன் செல்வத்தையும் அதிகாரத்தையும் இழந்தது. இன்று நம் நாட்டில் உள்ள மத ஸ்தாபனங்களுக்குள் அத்தகைய சக்தி உள்ளது. மதத்திற்குப் பதிலாக, பிரெஞ்சுப் புரட்சி காரண காரியத்தை நம்பத் தொடங்கியது. அரசாங்கம் மதத்தை விட்டு விலகியது. நாமும் அவ்வாறே செய்ய வேண்டும். மதக் கட்டுக்கதைகள் அகற்றப்பட வேண்டும். அறிவியல் ஆட்சி செய்ய வேண்டும். இளைஞர்களே உங்களுக்கு வாழ்த்துக்கள்!.
– ரணில் அபேசிங்க
தமிழில் : ஜீவன்