மைதானத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைவது தப்பு ஜெயவர்தனே கருத்து.
டெல்லி – ராஜஸ்தான் இடையேயான போட்டியின் நோ பால் சர்ச்சை குறித்தும், டெல்லி கேபிடள்ஸ் அணியினரின் ரியாக்ஷன் குறித்தும் மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே கருத்து கூறியுள்ளார்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. டெல்லி கேபிடள்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 6 சிக்ஸர்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 3 பந்திலும் சிக்ஸர் விளாசி ரோவ்மன் பவல் பரபரப்பை கிளப்ப, அந்த ஓவரின் 3வது பந்தை மெக்காய் நோ பாலாக வீசினார். ஆனால் அம்பயர் அதற்கு நோ பால் கொடுக்காததால் பெரும் சர்ச்சை வெடித்தது.
டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே களத்திற்குள் நுழைந்து அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்தார். கேப்டன் ரிஷப் பண்ட், வீரர்களை களத்தை விட்டு வெளியே வருமாறு அழைப்பு விடுத்தார்.
டெல்லி கேபிடள்ஸ் அணியினர் இவ்வளவு உணர்ச்சிவசமாக அந்த விஷயத்தை அணுகியதற்கு காரணம், ரோவ்மன் பவல் தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசி வெற்றிநம்பிக்கையை விதைத்ததுதான். ஒருவேளை அதற்கு நோ பால் கொடுக்கப்பட்டிருந்தால், டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. அதனால்தான், டெல்லி அணியினர் ஓவர் ரியாக்ட் செய்தார்கள். அம்பயரின் தவறான முடிவு ஆட்டத்தின் முடிவையே மாற்றிவிட்டது.
அந்த நோ பால் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள மஹேலா ஜெயவர்தனே, கண்டிப்பாக இதுமாதிரியான நோ பால் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். தேர்டு அம்பயர் பார்த்து கள நடுவர்களுக்கு அறிவுறுத்தும்படி செய்ய வேண்டும். ஆனால் அதேவேளையில், இந்த விஷயத்தில் டெல்லி அணி செயல்பட்ட விதம் அதிருப்தியளிக்கிறது. போட்டியை நிறுத்துவதோ, களத்திற்குள் அத்துமீறி நுழைவதோ சரியில்லை. தேர்டு அம்பயர்களிடம் செல்வதற்கு விதிமுறைகள் அனுமதிக்கவில்லை எனும்போது அதை செய்ய வலியுறுத்துவதில் அர்த்தம் இல்லை.
போட்டியின் இடையே இரண்டரை நிமிடம் பிரேக்கில் பயிற்சியாளர்கள் களத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அப்போது மட்டும்தான் உள்ளே செல்ல வேண்டுமே தவிர, எல்லா நேரத்திலும் பயிற்சியாளர்கள் செல்லக்கூடாது என்று ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.