கொல்கத்தா அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி.
10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி – கொல்கத்தா அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய பின்ச் 3 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அவர்களை தொடர்ந்து தமிழக வீரர் பாபா இந்திரஜித் 6 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் பவல்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதே ஓவரில் குல்தீப் வீசிய அடுத்த பந்தில் நரேன் டக் அவுட்டாகி வெளியேறினார். ஒரு முனையில் நிதானமாக விளையாடி வந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து அதிரடி வீரர் ரசல் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் குல்தீப் சுழலில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
15-வது ஓவருக்கு பிறகு அதிரடி காட்டிய நிதிஷ் ராணா அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ரிங்கு சிங் 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும் , ரகுமான் 3 விக்கெட்களும் கைப்பற்றி அசத்தினர்.
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடி வந்த பிரித்வி ஷா முதல் பந்திலே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 13 ரன்களில் பிரதீப் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த வார்னர் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அக்சர் பட்டேல் 24 எடுத்து ரன் அவுட்டாக கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. அணியின் நம்பிக்கையாக இருந்த பவல் – தாக்குர் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
இறுதியில் டெல்லி அணி 19-வது ஓவரில் 150 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.