பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தேர்தல்களில் அதிமுகவிற்கு தோல்வியா? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
அதிமுக சார்பில் சென்னையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இஸ்லாமியர்களுக்கு அதிமுக என்றும் உறுதுணையாக இருந்து உள்ளதாக குறிப்பிட்டார். சிறுபான்மையினர் நலனில் திமுக எப்போதும் இரட்டை வேடம் மட்டுமே போடுவதாகவும் விமர்சித்தார்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால்தான் அதிமுகவிற்கு சிறுபான்மையினர் ஓட்டுக்கள் கிடைப்பதில்லை என்பது உண்மை இல்லை என்று கூறிய அவர், கூட்டணியில் இருந்தாலும் இரண்டு கட்சிகளும் வெவ்வேறு கோட்பாடுகளும், கொள்கைகளும் கொண்ட கட்சிகள் எனவே தேர்தல் வெற்றி, தோல்விக்கு அவை காரணமாக இருக்காது என்று கூறினார்.
சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எஜமான விசுவாசத்திற்காக செல்வப்பெருந்தகை தரம் தாழ்ந்து பேசுவதாக குறிப்பிட்டார். அவர் காங்கிரஸ் கட்சியில் இருப்பதற்கு பதிலாக திமுகவில் இணைந்த விடலாம் என்றும் கூறினார்.