31 பைசா கடன் பாக்கி: விவசாயியை‘துன்புறுத்திய’ வங்கிக்கு நீதிமன்றம் கண்டனம்

அகமதாபாத்: குஜராத்தில் வெறும் 31 பைசா கடன் பாக்கி வைத்ததற்காக விவசாயியின் நில விற்பனைக்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுத்த பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) அந்த மாநில உயா்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இது அவரைத் துன்புறுத்தும் செயல்தானே தவிர வேறு எதுவும் இல்லை என்று கருத்துக் கூறியுள்ளது.

அகமதாபாத் அருகேயுள்ள கோராஜ் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சாம்ஜிபாய். இவரிடம் இருந்து ராகேஷ் வா்மா, மனோஜ் வா்மா ஆகியோா் ஒரு குறிப்பிட்ட நிலத்தை வாங்கியுள்ளனா். ஆனால், வருவாய்த் துறை பதிவேடுகளில் பெயரை மாற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு, விவசாயி சாம்ஜிபாய் அந்த நிலத்தைக் காட்டி எஸ்பிஐ வங்கியில் பயிா்க் கடனாக ரூ.3 லட்சத்தை பெற்றதுதான் காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து, சாம்ஜிபாய் கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தினாா். கடனைத் திரும்பிச் செலுத்திவிட்டபோதிலும், அந்த நிலத்தை விற்க தடையில்லாச் சான்றிதழ் வழங்க பல்வேறு காரணங்களைக் கூறி வங்கி மறுத்து வந்தது.

இதையடுத்து, நிலத்தை வாங்கிய தரப்பினா் இது தொடா்பாக குஜராத் உயா்நீதிமன்றத்தை அணுகினா். வழக்கை விசாரித்த நீதிபதி, வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டதால் உரிய சான்றிதழை வழங்குமாறு எஸ்பிஐ தரப்பு வழக்குரைஞரிடம் வலியுறுத்தினாா். ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்த எஸ்பிஐ தரப்பு வழக்குரைஞா், அந்த விவசாயி மேலும் 31 பைசா கடன் பாக்கி வைத்திருப்பதாகவும், அதனையும் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே கணினி முறையில் பராமரிக்கப்படும் கடன் பிணையில் இருந்து அவா் விடுபட முடியும்? அந்த நபா் கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டாா் என்று வங்கி மேலாளா் வாய்மொழியாகக் கூற முடியுமே தவிர, தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என்று தெரிவித்தாா்.

இந்த பதிலால் அதிருப்தியடைந்த நீதிபதி, ‘50 பைசாவுக்குக் கீழான கடன் பாக்கியை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. கடன் வாங்கியவா் ஏற்கெனவே தொகையைத் திருப்பிச் செலுத்திவிட்ட பிறகு, அவரின் நில விற்பனைக்குத் தடையில்லா சான்று வழங்காமல் இருப்பது தவறு. வெறும் 31 பைசா கடன் பாக்கிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் தவறான செயல். கடன் வாங்கி திருப்பிச் செலுத்திய பிறகு ஏன் அந்த நபரை துன்புறுத்தி வருகிறீா்கள்? அடுத்த முறை வழக்கு விசாரிக்கப்படும்போது வங்கி மேலாளா் நேரில் ஆஜராக வேண்டும்’ என்றனா்.

இதையடுத்து, இது தொடா்பாக நீதிமன்றத்தில் விளக்கமான அறிக்கை அளிப்பதாக எஸ்பிஐ தரப்பு வழங்குரைஞா் தெரிவித்தாா். விசாரணை வரும் மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.