ஐ.பி.எல். கிரிக்கெட் வெற்றியை தொடருமா லக்னோ?
இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள டெல்லி அணி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றிருக்கிறது. முந்தைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்ட டெல்லி அணி அதே உத்வேகத்தை இன்றைய ஆட்டத்திலும் தொடர முனைப்பு காட்டும். டேவிட் வார்னர் (6 ஆட்டத்தில் 3 அரைசதத்துடன் 261 ரன்) நல்ல பார்மில் இருப்பது அந்த அணிக்கு சாதகமான அம்சமாகும். ஆனால் ரிஷாப் பண்டிடம் (8 ஆட்டத்தில் 190 ரன்) இருந்து இன்னும் கவனிக்கத்தக்க இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. அவரது பேட்டும் சுழன்றடித்தால் தான் ‘மெகா’ ஸ்கோரை அடைய முடியும்.
அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 6 வெற்றி, 3 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறது. கடைசி இரு ஆட்டங்களில் மும்பை, பஞ்சாப்பை போட்டுத்தாக்கிய லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (2 சதத்துடன் 374 ரன்), விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் (271 ரன்), தீபக் ஹூடா (227 ரன்), பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா, சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ்கான் உள்ளிட்டோர் வலு சேர்க்கிறார்கள். ஏற்கனவே டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த லக்னோ அணி அதிக நம்பிக்கையுடன் களம் காணும். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.