கமலா ஹரிசின் குடியுரிமை பற்றி பிரச்சினை எழுப்பும் டிரம்ப்

அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹரிசின் குடியுரிமை பற்றி ஜனாதிபதி டிரம்ப் பிரச்சினை கிளப்பி இருக்கிறார்.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகின்றார்.

ஜனாதிபதி தேர்தலுடன் துணை ஜனாதிபதி தேர்தலும் நடப்பதால், ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹரிஸ் போட்டியிடுகிறார்.

தற்போது அமெரிக்க செனட் சபை உறுப்பினராக இருக்கும் 55 வயதான கமலா ஹரிசின் தந்தை டெனால்ட் ஹரிஸ் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜமைக்காவை பூர்வீகமாக கொண்டவர்.

தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் பிறந்தவர். டெனால்ட் ஹரிஸ் – சியாமளா கோபாலன் தம்பதிக்கு, கலிபோர்னியாவில் 1964-ம் ஆண்டு கமலா ஹரிஸ் பிறந்தார்.

ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் அவர் அமெரிக்காவில் பிறந்தவராக இருக்க வேண்டும் என்பது முக்கியம் ஆகும்.

அமெரிக்காவில் தற்போது நிறவெறி பிரச்சினை தலைதூக்கி இருக்கும் நிலையில் ஆப்பிரிக்க -அமெரிக்க பெண்ணான கமலா ஹரிசை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்து எடுத்து இருப்பதை முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்று உள்ளனர்.

கமலா ஹரிஸ் வெற்றி பெற்றால் அவர் முதல் கறுப்பின துணை ஜனாதிபதி என்ற பெருமையை பெறுவார்.

முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவை பூர்வீகமாக கொண்டவர். முன்பு அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட போது ‘பிர்தர் இயக்கம்’ அவரது அமெரிக்க குடியுரிமை பற்றிய பிரச்சினையை கிளப்பியது.

ஆனால் அது எடுபடாமல் போனது. தேர்தலில் அவர் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார்.

இப்போது அந்த இயக்கம், துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹரிசின் அமெரிக்க குடியுரிமை குறித்து பிரச்சினையை கிளப்பி உள்ளது.
இது சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக வெளியாகி உள்ளது.

குடியரசு கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்பி, கமலா ஹரிசிடம் தோல்வி அடைந்த டொக்டர் ஜோன் ஈஸ்ட்மேன், ‘நியூஸ்வீக்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் கமலா ஹரிசின் குடியுரிமை குறித்தும், அவர் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கான தகுதி குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் மத்தியில் இது குறித்து உரையாற்றியுள்ளார்.

கமலா ஹரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதியாகவோ, துணை ஜனாதிபதியாகவோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதி இல்லாமல் போகலாம் என்று சாப்மேன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோன் ஈஸ்ட்மேன் பத்திரிகையில் கட்டுரை எழுதி இருக்கிறாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பிய போதே அமெரிக்க ஜனாதிபதி அதற்கு பதிலளித்துள்ளார்.

அந்த தகவல் சரியானதா என்றும், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் கமலா ஹரிசுக்கு இருக்கின்றதா? என்பது பற்றியும் எனக்கு எதுவும் தெரியவில்லை என்று பதில் அளித்துள்ளார்.

கமலா ஹரிஸ் அமெரிக்காவில் பிறக்காதவராக இருந்தால், தேர்தலில் போட்டியிட தகுதி கிடையாது என்றும் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

அத்துடன், கமலா ஹாரிசை வேட்பாளராக தேர்வு செய்யும் முன்பு ஜனநாயக கட்சியினர் இந்த விவகாரம் குறித்து நன்கு ஆய்வு செய்து இருக்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

ஏற்கனவே டிரம்ப், கமலா ஹரிசுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கமலா ஹரிசின் அமெரிக்க குடியுரிமை குறித்து பிரச்சினை கிளம்பி இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி ஜோ பைடனின் தேர்தல் பிரசார நிதிக்குழுவின் உறுப்பினர் அஜய் புடோரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தேவையற்ற சர்ச்சை என கூறியுள்ளார்.

கமலா ஹரிஸ் கலிபோர்னியாவில் உள்ள ஒக்லாந்தில் 1964-ம் ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி பிறந்தவர். 1787-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் பிறந்தவர் ஒருவர் அமெரிக்காவின் இயற்கையான குடிமகனாக கருதப்படுவார் என்று அரசியல் சட்டத்தின் 2-வது பிரிவு கூறுவதாக அவரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே கமலா ஹரிஸ் அமெரிக்காவின் இயற்கையான பிரஜை என்று தெரிவித்துள்ள அதேவேளை அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி குறித்து எந்த கேள்வியும் எழுப்ப முடியாதெனவும் அஜய் புடோரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.