அமெரிக்க மாகாணத்தை புரட்டிப்போட்ட சூறாவளி.
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தை நேற்று முன்தினம் பயங்கர சூறாவளி தாக்கியது. அங்கு மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இந்த சுழல் காற்றில் சிக்கி வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் மரங்கள், மின் கம்பங்கள் என அனைத்தும் துவம்சம் செய்யப்பட்டன. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களின் மேற்கூறைகள் பல மைல் தொலைவுக்கு தூக்கி எறியப்பட்டன.
குறிப்பாக இந்த சூறாவளி கன்சாஸ் மாகாணத்தின் அண்டோவர் நகரை முற்றிலுமாக புரட்டிப்போட்டு விட்டது. அங்கு 100-க்கும் அதிகமான கட்டிடங்கள் முற்றிலுமாக இடிந்து தரை மட்டமாகின. மேலும் சூறாவளி காற்றில் சிக்கி மின் கம்பங்கள் சாய்ந்ததால் அந்த நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.
இதனிடையே ஓக்லஹோமா நகரில் இருந்து கன்சாஸ் மாகாணத்துக்கு வந்து கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களின் கார் சூறாவளி காற்றில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலே பலியாகினர்.
கன்சாஸ் மாகாணத்தை தாக்கிய இந்த சூறாவளி அயோவா, மிசோரி மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாகாணங்களிலும் லேசான பாதிப்புகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கன்சாஸ் உள்பட 4 மாகாணங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.