திருப்பதியில் கடத்தப்பட்ட 5 வயது சிறுவன்.. மைசூரில் பத்திரமாக மீட்ட போலீஸ்
திருப்பதி மலையில் பக்தர்களுக்கு திருநாமம் இட்டு பிழைப்பு நடத்தும் தம்பதியின் ஐந்து வயது மகனை மர்ம பெண் ஒருவர் மே 1ஆம் தேதி அன்று மாலை கடத்தி சென்றுவிட்டார்.
திருப்பதி அருகே உள்ள தாமிநேடு பகுதியை சேர்ந்த வெங்கடரமணா மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் திருமலையில் பக்தர்களுக்கு திருநாமம் இட்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். மே 1-ம் தேதி மாலை 6 மணி அளவில் வெங்கட்ரமணா அவருடைய மனைவி ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்கு வந்த பெண் ஒருவர் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கோவர்தனை கடத்தி சென்றுவிட்டார்.
நீண்ட நேரம் தேடியும் மகன் கிடைக்காத நிலையில் இதுபற்றி வெங்கட்ரமணா திருமலை காவல்துறையில் புகார் அளித்தார்.திருப்பதி மலையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம பெண் ஒருவர் சிறுவன் கோவர்த்தனை கடத்தி பேருந்து மூலம் திருப்பதிக்கு அழைத்து சென்றது உறுதி செய்யப்பட்டது. மேலும் திருப்பதியில் இருந்து ரயில் மூலம் அந்த சிறுவனை அழைத்து சென்றதும் தெரியவந்தது.
இந்த கடத்தல் சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த திருமலை காவல்துறையினர் சிறுவனை கடத்திய பெண் மற்றும் சிறுவன் கோவர்தன் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சிறுவனுடன் அந்த மர்ம பெண் மைசூருக்கு ரயில் மூலம் வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
அதன் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் மைசூரில் அந்த பெண்ணை கைது செய்து சிறுவனையும் மீட்டனர். சிறுவனை கடத்திய பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவரும் திருமலை காவல்துறையினர், சிறுவன் கோவர்தனை அவரது பெற்றோரிடம் இன்று காலை பத்திரமாக ஒப்படைத்தனர்.