பேருந்துக்குள் மழை.. நனைந்த படியே பயணம்.. பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் அக்னிநட்சத்திரம் ஆரம்பித்த நிலையில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பணிமனைக்கு சொந்தமான TN 57 N 1887 என்ற எண் கொண்ட அரசுப்பேருந்து, தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து – மதுரை ஆரப்பாளையம் நோக்கி வந்தது.

அப்போது பெய்த மழையின் காரணமாக பேருந்து முழுவதும் அதிக அளவு மழைநீர் உள்ளே ஒழுகி வடிந்துள்ளது. இதனால் பேருந்தில் போதிய இருக்கைகள் இருந்தும், மழையால் அனைத்து இருக்கைகளும் ஈரமானதால் பயணிகள் நின்றபடியே பயணம் செய்துள்ளனர். நின்றபடியே பயணம் செய்தாலும் பெரும்பாலான பயணிகள் மழையில் நனைந்தபடியே சென்றுள்ளனர்.

இதனால் கல்லூரி மாணவர்கள், வயதானவர்கள், பெண்கள் சிரமங்களை சந்தித்தனர். தாங்கள் கொண்டு வந்த பைகள் முழுவதும் நனைந்ததால் அவதிக்கு உள்ளாகினர். இதற்கு போக்குவரத்து நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி பேருந்துகளை கண்காணித்து அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பயணிகளின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.