பிரியாணியுடன் தங்க நகைகளையும் ருசிபார்த்த வாலிபர்.. விருந்துக்கு அழைத்தவர் வீட்டில் நகைகளை விழுங்கி நூதன முறையில் திருட்டு

விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தாட்சாயணி (34), நகை கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது நகை கடையில் பணிபுரியும் மேலாளர் சாரா என்பவரை விருந்துக்கு வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த சாரா தனது நண்பர் சையத் முகமது அபுபக்கர் என்பவரையும் உடன் அழைத்து வந்துள்ளார். இருவருக்கும் பிரியாணி விருந்து சாப்பிட்டு சென்றனர்.

பின்னர் தாட்சாயினி சிறிது நேரம் கழித்து அறையில் இருந்த பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே பார்த்தபோது பீரோவில் இருந்த மூன்று தங்கம் மற்றும் வைர செயின்கள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். எங்கு தேடியும் கிடைக்காததால் வீட்டிற்கு கடைசியாக வந்த தனது மேலாளர் சாராவுடன் வந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை வீட்டிற்கு அழைத்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நகைக்கு ஆசைப்பட்டு வீட்டில் இருந்த நகையை எடுத்து விழுங்கி விட்டு பிரியாணி விருந்தையும் சாப்பிட்டு விட்டு சென்றதாக தெரிவித்தார். நகையை உண்மையாக விழுங்கி உள்ளாரா என்பதை கண்டறிய மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் நகைகள் இருப்பது தெரியவந்தது.

மேலும் இனிமா கொடுத்த நகைகள் வெளியே வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நகைகள் வெளியே வராததால் தாட்சாயணி அதிர்ச்சி அடைந்தார். நேற்று அந்த நபர் இயற்கை உபாதை கழிக்கும் போது திருடி விழுங்கிய மூன்று செயின்கள் வெளியே வந்தது இதனையடுத்து விருகம்பாக்கம் போலீசாரிடம் அந்த செயின்கள் சுத்தம் செய்து ஒப்படைக்கப்பட்டது.

போலீசார் அந்த நகைகளை தாட்சாயணியிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இதுகுறித்து நடவடிக்கை ஏதும் தேவையில்லை நகைகள் மட்டும் கிடைத்ததே போதும் என தாட்சாயினி கூறியதாகவும் அதன் பேரில் சையத் முகமது அபுபக்கரிடம் போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்தனர். விருந்துக்கு அழைத்தவர் வீட்டில் நூதன முறையில் நகைகளை திருடி விழுங்கி பிரியாணியை சாப்பிட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.