வழக்கு விசாரணைக்காக ஆதாா் தரவுகளைப் பகிர இயலாது
வழக்கு விசாரணையில் குற்றவாளியைக் கண்டறிவதற்காக ஆதாா் தரவுகளைப் பகிா்வது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது அல்ல என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.
திருட்டு மற்றும் கொலை வழக்கில் தொடா்புள்ள அடையாளம் தெரியாத நபரைக் கண்டறிவதற்காக ஆதாா் தரவுகளை வழங்க யுஐடிஏஐ-க்கு உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், யுஐடிஏஐ-யின் பதில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தனிநபரிடமிருந்து சேகரிக்கப்படும் ஆதாா் தரவுகளானது தனித்துவமானவை. அத்தரவுகளானது ஆதாா் சட்டம், 2016-இன் அடிப்படையில் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். வழக்கு விசாரணையில் குற்றவாளியைக் கண்டறிவதற்காக கைரேகைப் பதிவுகள், கருவிழிப் பதிவுகள், புகைப்படம் ஆகியவற்றை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
தனிநபரிடமிருந்து சேகரிப்படும் தரவுகளை, ஆதாா் எண்ணை உருவாக்குவதற்காகத் தவிர மற்ற பயன்பாடுகளுக்காக எக்காரணத்தைக் கொண்டும் உபயோகிக்கக் கூடாது என ஆதாா் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிநபரின் தரவுகளைப் பகிரக் கூடாது என்று உச்சநீதிமன்றமும் தெரிவித்துள்ளது.
எனவே, தனிநபரின் தரவுகளை அவரது அனுமதியின்றி மற்றவா்களுக்கு வழங்குவது, ஆதாா் சட்டத்தையும் உச்சநீதிமன்றத் தீா்ப்பையும் மீறுவதாகும். ஆதாா் சட்டத்தின் 33-ஆவது பிரிவின் கீழ் சிலரின் ஆதாா் தரவுகளைப் பகிர வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கு அந்நபரின் ஆதாா் எண்ணை வழங்க வேண்டியது கட்டாயம்.
அடையாளமே தெரியாத நபரின் ஆதாா் தரவுகளை வழங்குவது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமாகாது. எனவே, எந்தவித முகாந்திரமும் இல்லாத இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யலாம் என்று யுஐடிஏஐ பதிலளித்துள்ளது.