இந்தியாவில் 47 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி- உலக சுகாதார மையம் ; மறுக்கும் மத்திய அரசு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 47 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும், இது மத்திய அரசு அறிவித்துள்ளதை விட 10 மடங்கு அதிகம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. எனினும் இந்த கணக்கு தவறானது என மத்திய அரசு கூறியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதில், உலகம் முழுவதும் ஒரு கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசுகள் அளித்த தரவுகளோடு ஒப்பிடும் போது, இது இரண்டு மடங்குக்கும் அதிகம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் 47 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், ) இது இந்திய அரசு அளித்துள்ள தகவலோடு ஒப்பிடுகையில் 10 மடங்கு அதிகம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பல்ராம் பார்கவா மறுத்துள்ளார்.
இந்தியாவில் திட்டமிட்ட ரீதியில் தரவுகளை சேகரிக்கும் முறை அமலில் உள்ளதாகவும் உலக சுகாதர நிறுவனத்தின் மேம்போக்கான பத்திரிகை அறிக்கையை நம்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் உயிரிழப்பவர்களை மட்டுமே கொரோனாவால் உயிரிழந்தவர்கள் என்று கருதுவது என இந்திய அரசு முடிவு செய்து அதன் அடிப்படையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டதாகவும் பார்கவா கூறியுள்ளார்.
இந்திய சுகாதாரத்துறை அளித்த அதிகாரபூர்வ தகவலின் படி, 2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரை 4 லட்சத்து 81 ஆயிரம் கொரோனா மரணங்கள் நிகழ்ந்ததாக கூறியது. ஆனால். இதனை விட உயிரிழப்பு பத்து மடங்கு அதிகம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இல்லை.
உலக மக்கள் தொகையில், 50 சதவிகிதம் பேர் வசிக்கும் 20 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கொரோனா காலத்தில் 80 சதவிகித கூடுதல் மரணங்கள் இந்த நாடுகளில் ஏற்பட்டுள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்ட கணக்கில் வராத மரணங்கள் இந்தியாவில் ஏற்பட்டதாக WHO கூறியுள்ளது.
சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டிற்கான நிறுவனம் நடத்திய சுதந்திரமான ஆய்வில், இந்தியாவின் 12 மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட மரணங்கள் உலக சுகாதார மையம் அளித்துள்ள தரவுகளுடன் ஒத்துபோவதாக தெரிவித்துள்ளது.
இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, `இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், மோடி தலைமையிலான அரசாங்கம் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர்தான் உயிரிழந்தனர் என பொய் சொல்வதாக குறிப்பிட்டுள்ளார். அறிவியல் பொய் சொல்லாது, ஆனால் பிரதமர் மோடி பொய் சொல்வார் என்றும் அவர் சாடியிள்ளார். அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.