ஒரே நாளில் 3,451 பேருக்கு கொரோனா… மகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று
நாட்டின் தினசரி கோவிட் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் புதிதாக 3,451 பேருக்கு கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவரின் எண்ணிக்கை 20,365 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு நான்கு கோடியே 25 லட்சத்து 57 ஆயிரத்து 495ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 40 உயிரிழப்பு பதிவான நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 064ஆக உயர்ந்துள்ளது.
நாட்டின் தினசரி தொற்று பாசிடிவிட்டி சதவீதம் 0.78% ஆக உள்ளது. மாநில வாரியாக பார்க்கையில் டெல்லியில் அதிகபட்சமாக 1,047 தினசரி பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அடுத்ததாக மகாராஷ்டிராவில் 253 தினசரி பாதிப்புகளும், கர்நாடகாவில் 171 தினசரி பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. டெல்லிக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவிலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மார்ச் மாதத்திற்குப் பின் அதிகளவிலான பாதிப்பு நேற்று மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளது.
தடுப்பூசி திட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் 17 லட்சத்து 39 ஆயிரத்து 403 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 190 கோடியே 11 லட்சத்து 11 ஆயிரத்து 647 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், 100 கோடியே 56 லட்சம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 86 கோடியே 72 லட்சம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும், 2 கோடியே 81 லட்சம் பேருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி டோஸ்சும் செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, DPSRU என்ற மருத்துவ அமைப்பு நடத்திய ஆய்வில், வீட்டில் கோவிட் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நபர்களில் யோக பயிற்சி செய்யும் 92 சதவீதம் பேருக்கு சிறப்பான முன்னேற்றம் ஏற்படுவது தெரியவந்துள்ளது. டெல்லி அரசும் அம்மாநில மக்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச யோகா பயிற்சி செல்லித் தருகிறது.