ஹைதராபாத்தில் நாய்களுக்கு புஃபா வைரஸ் பாதிப்பு இருப்பதை கண்டறிந்த கால்நடை நிபுணர்கள்!
ஹைதராபாத்தில் ஏராளமான நாய் குட்டிகள் மற்றும் நாய்களுக்கு கேனைன் புஃபா வைரஸ் (CBuV) தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
PVNR தெலுங்கானா மாநில கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த கால்நடை நிபுணர்கள், தொற்று நோய்களின் போது, நாய்க்குட்டிகள் மற்றும் நாய்களிடமிருந்து 186 சேம்பிள்ஸ்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் வயிற்று போக்கு உள்ளிட்ட கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் canine bufavirus (CBuV) 4.6% சேம்பிள்ஸ்களில் இருப்பதை கண்டறிந்தனர்.
தொடர்ந்து குறிப்பிட்ட வைரஸின் மரபணுவை வரிசைப்படுத்தியதில் ஹைதராபாத்தில் கண்டறியப்பட்டுள்ள புஃபா வைரஸ் ஸ்ட்ரெய்ன் (CBuV ஸ்ட்ரெய்ன் 407/PVNRTVU/2020) சீன வம்சாவளியை சேர்ந்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இதுவரை இத்தாலி மற்றும் சீனாவில் மட்டுமே பதிவாகி இருந்த இந்த புஃபா வைரஸ் ஸ்ட்ரெய்ன், தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டு உள்ளதால் குறிப்பிட்ட இந்த தொற்று குறித்த கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
CBuV-யானது ஒரு புதிய புரோட்டோபார்வோ வைரஸ் (protoparvo virus) ஆகும். இது நாய்களில் இரைப்பை குடல் அழற்சி மற்றும் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. CBuV இன் நுண்ணுயிர் பரவலை ஆராய்ந்த நிபுணர்கள், ‘இந்தியாவில் கேனைன் புஃபாவைரஸின் ஃபர்ஸ்ட் ரிப்போர்ட்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட்டு உள்ளனர்.
First Report of Canine Bufavirus in India என்ற இந்த ஆய்வு கட்டுரை Archives of Virology என்ற இதழின் சமீபத்திய பதிப்பில் வெளியானது. இந்த கட்டுரையில் ஹைதராபாத்தில் காணப்படும் தற்போதைய திரிபு ஆசிய பரம்பரையின் ஒரு பகுதியாக சீன CBuV வேரியன்ட்களுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த ஆய்வு இந்தியாவில் புஃபாவைரஸின் மரபணு வேறுபாடு பற்றிய மேலதிக ஆய்வுகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறி உள்ளார்கள்.
CBuV வைரஸ் முதலில் கடந்த 2016-ல் இத்தாலியில் 5 மாத வயதுடைய, 3 கலப்பு இன நாய்க்குட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பின் கடந்த 2019 மற்றும் 2021-ல் சீனாவில் பதிவாகியுள்ளது. இப்போது மூன்றாவது நாடாக இந்தியாவில் CBuV வைரஸ் நாய்களிடம் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸை பற்றி நமக்கு அதிகம் தெரியாது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த ஆய்விற்காக குடல் அழற்சி அறிகுறிகளை கொண்ட நாய்களிடமிருந்து மல மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்தனர். 1 மாதம் முதல் 10 வயது வரையிலான நாய்களிடமிருந்து 186 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. வைரஸ் டிஎன்ஏவையும் ஆராய்ச்சியாளர்கள் மீட்டனர். பிரித்தெடுக்கப்பட்ட DNA தேவைப்படும் வரை -20 டிகிரி செல்சியஸில் வைக்கப்பட்டது. புஃபா வைரஸை கண்டறிய ரியல்-டைம் PCR மதிப்பீடுகள் பயன்படுத்தப்பட்டது. ரியல்-டைம் PCR மூலம் பரிசோதிக்கப்பட்ட 186 மாதிரிகளில் 8-ல் CBuV கண்டறியப்பட்டது. இந்த 8 மாதிரிகளில் 6 நாய்க்குட்டிகள், மற்ற 2 பெரிய நாய்கள் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.