மிரட்டும் அசானி புயல்.. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
அசானி புயல் காரணமாக, ஒடிசாவில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சென்னையில் இரவு நேரத்தில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிரப் புயலான அசானி, ஆந்திராவின் காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கில் 330 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு வடக்கு ஆந்திரா – ஒடிசா கடற்கரையை ஒட்டிய சென்றடையும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது வடக்கு, வடகிழக்கு திசைக்கு மாறி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதியை நோக்கி நகரும் என்றும், பின்னர் 24 மணிநேரத்தில் புயலாக வலு குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் தாக்கத்தால் ஒடிசா மாநிலத்தில் கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர் மற்றும் கேந்திரபாரா ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், 113 இடங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதேபோன்று, ஆந்திரா மாநிலத்திலும் கடலோரப் பகுதிகளில் பேரிடர் மீட்புப் படையினர் முன்னெச்சரிகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, ஒடிசா மாநிலம் கோபால்பூர் அருகே 11 பேருடன் வந்த படகு ஒன்று பழுதாகி கடலில் தத்தளித்தது.
புயல் காற்று காரணமாக கரை திரும்ப முடியாத நிலையில், கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் அவர்களை பாதுகாப்பாக மீட்டு வந்தனர். பின்னர், கடற்கரையோரம் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததும், அவர்கள் ஒருவர் பின் ஒருவதாக கீழே குதித்தனர்.
இந்நிலையில், அசானி புயல் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு மிதமான மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல தமிழகத்தின் டெல்டா மாவட்டங்ளிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளில் நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், திருப்பத்தூர் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி, வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 10 மணி முதல் இடி மின்னல் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. கன மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், மாவட்டம் முழுவதும் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், தமிழகத்தின் 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.