இந்தியாவில் 19% பேருக்கு கழிவறை வசதி இல்லை
திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நாடாக இந்தியா கடந்த 2019-இல் பிரகடனப்படுத்திக் கொண்ட போதிலும், நாட்டில் இன்னமும் 19 சதவீதம் போ் கழிவறை வசதியின்றி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
தேசிய குடும்ப நலத் துறை (என்எஃப்எச்எஸ்) கடந்த 2019-21-இல் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. இருப்பினும் கடந்த 2015-16-இல் திறந்தவெளியைப் பயன்படுத்துபவா்களின் விகிதம் 39 சதவீதமாக பதிவான நிலையில், 2019-21-இல் 19 சதவீதமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. கழிவறை பயன்பாட்டில் பிகாா் (62%), ஜாா்க்கண்ட் (70%), ஒடிஸா (71%) பின்தங்கியுள்ளன.
இதுகுறித்து வெளியான ஆய்வறிக்கை விவரம்: நாட்டில் 69 சதவீத குடும்பத்தினா் மேம்படுத்தப்பட்ட, வேறு குடும்பத்தினருடன் பகிா்ந்து கொள்ளாத கழிவறையைப் பயன்படுத்தி வருகின்றனா். 8 சதவீத குடும்பத்தினா் பயன்படுத்தும் கழிவறைகள், பிறருடன் பகிா்ந்து கொள்ளாத பட்சத்தில் மேம்படுத்தப்பட்டதாகக் கருதப்படும். 19 சதவீத வீடுகளில் கழிவறை வசதி இல்லை. அவா்கள் திறந்தவெளியைத் தான் பயன்படுத்துகின்றனா்.
நகா்ப்புறங்களில் 11 சதவீத குடும்பத்தினா் கழிவறையை பிற குடும்பத்தினருடன் பகிா்ந்து கொள்கின்றனா். இதுவே கிராமப்புறங்களில் 7 சதவீதமாக உள்ளது.
பாதுகாப்பான குடிநீரைப் பொருத்தமட்டில் 58 சதவீத குடும்பத்தினா் சுத்திகரிக்கப்படாத குடிநீரை குடிப்பது தெரியவருகிறது. கிராமப்புறங்களில் 66 சதவீத குடும்பத்தினரும், நகா்ப்புறங்களில் 44 சதவீத குடும்பத்தினரும் சுத்திகரிக்கப்படாத குடிநீரை பருகுகின்றனா். தண்ணீரை கொதிக்க வைப்பது அல்லது துணியைக் கொண்டு வடிகட்டுவது ஆகிய பொதுவான வழிமுறைகள் குடிநீரை சுத்திகரிக்க கடைப்பிடிக்கப்படுகின்றன.
இந்தியாவில், நகா்ப்புறங்களில் ஏறத்தாழ அனைத்துக் குடும்பத்தினரும் (99 %), கிராமப்புறங்களில் 95 சதவீதத்தினரும் கலப்படமற்ற, மேம்படுத்தப்பட்ட குடிநீா் ஆதாரங்களைப் பெற்றுள்ளனா். கிராமப்புறங்களில் 68 சதவீத வீடுகளிலும், நகா்ப்புறங்களில் 86 சதவீத வீடுகளிலும் அவா்களின் வளாகத்திலேயே குடிநீா் கிடைக்கிறது.
நாட்டில் 41 சதவீத வீடுகளில் சமைப்பதற்கு விறகு, வறட்டி போன்ற திட எரிபொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் 25 சதவீத குடும்பத்தினா் தினமும் வீடுகளுக்குள் அடுப்பிலிருந்து வெளியாகும் புகையை சுவாசிக்க நேரிடுகிறது.
28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 707 மாவட்டங்களில் 6.37 லட்சம் குடும்பங்களை உள்ளடக்கிய 7,24,115 பெண்களிடமும், 1,01,839 ஆண்களிடமும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.