மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சேவையை முன்னெடுக்க தீர்மானம்..!
தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இன்று(12) காலை 08 மணி முதல் ரயில் போக்குவரத்தை வரையறைகளுடன் முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைவாக, வெயாங்கொடை மற்றும் களுத்துறை இடையிலான ரயில் போக்குவரத்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுப்படுத்தப்படும் என திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
குறித்த ரயில் சேவை தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் வாடிக்கையாளர் பிரிவின் 1971 என்ற இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மாகாணங்களுக்குள் மாத்திரம் பஸ் சேவைகளை வரையறைகளுடன் முன்னெடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையை முன்னெடுக்கும் அளவுக்கு போதிய நேரம் இல்லை என அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மாகாணங்களுக்கு இடையில் தனியார் பஸ் சேவைகளை இன்று(12) முன்னெடுக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.