Work from home-க்கு நோ சொன்ன நிறுவனம்.. அப்ப வேலையே வேண்டாம்.. 800 ஊழியர்கள் அதிரடி ராஜினாமா!
கடந்த 2020 மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததன் காரணமாக, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த சமயத்தில் பல்வேறு தனியார், ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிசெய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதன்பின்னர், ஒரு சில மாதங்களில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைய தொடங்கினாலும், அடுத்தடுத்த அலைகள் வராலம் என்பதால், பல்வேறு தனியார், ஐடி நிறுவனங்களும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய அறிவுறுத்தி வந்தது.
இப்படியே 2 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், தற்போது கொரோனா பாதிப்பும் முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. ஒரு சில இடங்களிலும் கொரோனா பரவல் இருந்தாலும், அதுவும் லேசான அளவிலே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு அலுவலகங்களும் தங்களது ஊழியர்களை அலுவலகம் வருமாறு வலியுறுத்தியது. எனினும், வீட்டில் இருந்து பணி செய்வதை விரும்பும் ஊழியர்கள் அலுவலகத்தின் இந்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து வந்தனர். எனினும், நிறுவனங்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.
இந்நிலையில், இதுபோன்று அலுவலகம் வரச்சொன்ன தனியார் நிறுவனம் ஒன்றை சேர்ந்த 800 ஊழியர்கள் இரண்டு மாதத்தில் அந்நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலின் படி, கோடிங் முறையைக் கற்றுக்கொள்வதற்கான தளமான WhiteHat Jr-ன் 800 க்கும் மேற்பட்ட முழுநேர ஊழியர்கள், கடந்த இரண்டு மாதங்களில் பதவி விலகியுள்ளனர். கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ் கட்டுப்பாட்டின் இயங்கும் நிறுவனம்தான் ஒயிட் ஹேட் எஜுகேசன் டெக்னாலஜி.
இந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் பெரும்பாலானோர், மீண்டும் அலுவலகம் வந்து வேலை செய்ய விரும்பாத காரணத்தால் தாமாக முன்வந்து வேலையை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச்-18ம் தேதியன்று, ஒயிட் ஹேட் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளது. அதில், ஒரு மாத த்திற்குள் மும்பை, பெங்களூரு மற்றும் குருகிராம் போன்ற பல்வேறு இடங்களில் உள்ள தங்களது அலுவலகத்திற்கு ஊழியர்கள் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் இந்த முடிவில் பெரும்பாலான ஊழியர்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே தங்களது வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 800 பேர் அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்னும் இதுபோன்ற பலர் தங்களது வேலையை விட்டு ராஜினாமா செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை அலுவகத்துக்கு வர சொன்னதும், சிலர் வீட்டில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு அலுவலகத்துக்கு ஆர்வமுடன் திரும்பினர். ஆனால், பலர் அதற்கு மாறாக வீட்டிலிருந்தே தொடர்ந்து வேலை பார்க்க விரும்பினர். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலேயே வீட்டிலிருந்து பணி செய்ததால், பெரும்பாலான ஊழியர்கள் பெருநகரங்களை விட்டு, தங்களது சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
இனி, இப்படி ஊரிலேயே இருந்து பணி செய்வோம் என்ற நினைப்பில் இருந்த ஊழியர்களை மீண்டும் அலுவலகத்துக்கு அழைப்பதால், அவர்கள் அலைச்சல் போன்ற சிரமங்களை பெரும் பின்னடைவாக பார்க்க தொடங்கியுள்ளனர். மேலும், தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு என பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி, அலுவலகம் வர சொன்னால் வேலையே வேண்டாம் என்று முடிவுக்கு ஊழியர்கள் வந்துவிட்டனர்.