கேரளாவில் வேகமெடுக்கும் தக்காளி காய்ச்சல் பரவல்.. 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு… அறிகுறிகள் என்னென்ன?
சிக்குன்குனியா போன்ற அறிகுறிகளைக் கொண்ட மர்ம காய்ச்சல் தக்காளி வைரஸ் காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. இந்த தாக்காளி காய்ச்சலால் கேரளாவில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதுக்கு உட்பட்ட இளம் குழந்தைகளை குறிவைக்கும் இந்த புதிய காய்ச்சலால் பெற்றோர்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் இந்த புதிய காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இதுவரை 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இக்காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தமிழக – கேரள எல்லையில் அதிகாரிகள் குழு நிறுத்தப்பட்டு, அண்டை மாநிலத்தில் இருந்து வருபவர்கள் பரிசோதனைக்கு பின்னரே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது, தமிழகத்தை தொடர்ந்து, கர்நாடகாவும் பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
தொடர்ந்து, தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பரிசோதிக்க பிரத்யேக மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் குழந்தைகளைப் பரிசோதிப்பதற்காக அங்கன்வாடிகளில் சிறப்புப் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு, 24 பேர் பேர் கொண்ட குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தக்காளி காய்ச்சல் என்றால் என்ன?
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் ஒருவகையான வைரஸ் காய்ச்சல், பெரும்பாலும் கண்டறியப்படாத காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதால் இது தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது.
அறிகுறிகள் என்ன?
தக்காளிக் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தீவிர காய்ச்சல், உடலில் தடிப்புகள், தோல் எரிச்சல், கை மற்றும் கால்களின் தோல் நிற மாற்றம், கொப்புளங்கள், வாந்தி, வயிற்றுப்போக்கு, சளி, இருமல், தும்மல், சோர்வு மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு இதில் எந்த அறிகுறிகள் தோன்றினாலும் உடனடியாக மருத்துவவரை அணுக வேண்டுமென சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொற்றக்கூடியதா?
மற்ற எல்லா வைரஸ் காய்ச்சலைப் போலவே, தக்காளி காய்ச்சலும் பரவக்கூடியது மற்றும் பரவுவதைத் தடுக்க ஒரே வழி பாதிக்கப்பட்ட குழந்தையை தனிமையில் வைத்திருப்பதுதான். காய்ச்சலால் ஏற்படும் கொப்புளங்களை குழந்தைகள் சொறிவதைத் தடுப்பது அவசியம்.
இந்த காய்ச்சல் பாதிப்புள்ள குழந்தைகள் சரியான ஓய்வில் இருக்க வேண்டும். மேலும், குழந்தைகளை சுகாதாரமாக வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் பரவாமல் தடுக்க, பாதிக்கப்பட்ட நபர்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள், உடைகள் மற்றும் பிற பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும்.