தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்திற்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை
தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்திற்கு தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்திற்கு வரும் 22ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த கபடி வீரர் திருவேல் அழகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், கபடி விளையாட்டு குறித்து போதிய நிபுணத்துவம் இல்லாதவர்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் பதிவியில் இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
காலவரையின்றி பதவியில் இருப்பதன் மீது சங்கம் முறையாக செயல்பட முடியாது சூழல் உள்ளதாகவும் திறமையான வீரர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டு சங்கங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக கடந்த 2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை எனவும் மேலும் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவு படியும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முறைகளை பின்பற்றாமல் எந்த வித வெளிப்படை தன்மையும் இன்றி தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்திற்கு வரும் 22ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிப்பதோடு முறையாக தேர்தல் நடத்தப்படும் வரை சங்கத்தை நிர்வகிப்பதற்காக இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற ஜி.ஆர்.சுவாமிநாதன் தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்திற்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தார்