வீடுகளுக்காக நரிக்குறவர் இன மக்களிடம் பண வசூல் – ஒப்பந்ததாரர் மீது பகீர் புகார்
செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகள் கட்டிட 35 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு இதுவரையிலும் கட்டி முடிக்காத அரசு ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், விரைந்து 75 நரிக்குறவர் இன மக்களுக்கு வீடுகளை கட்டி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் பேரூராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில், திருவண்ணாமலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் குடிசை போட்டு வாழ்ந்து வந்த சுமார் 75 நரிக்குறவர் இன குடும்பங்களுக்கு கடந்த 2018 -2019ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச வீட்டுமனை வழங்கி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டது.
நரிக்குறவர் இன மக்களுக்கு வீடு கட்டிட பேரூராட்சி மூலம் ஒப்பந்தம் பெற்ற அதிமுகவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் கடந்த நான்கு வருடங்களாக கட்டிடத்தை கட்டி முடிக்காமல் நரிக்குறவ இன மக்களுக்கு வீடு கட்ட தலா ஒரு குடும்பத்திடம் அரசு வழங்கும் தொகையை விட கூடுதலாக 35 ஆயிரம் ரூபாய் பெற்று கொண்டும் இதுவரையிலும் வீடு கட்டும் பணியினை முழுமையாக முடிக்கவில்லை.
75 வீடுகள் கட்ட அனுமதி அளித்தும் இதுவரையில் 12 வீடுகள் மட்டுமே ஓரளவு கட்டியுள்ளதாக நரிக்குறவர் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட மக்களிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் காவல் துறையினரிடம் தெரிவித்தார்.
மேலும் பருவமழை தொடங்குவதற்கு முன்பே அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட வேண்டும் என செங்கம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.