அம்மாவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: விடுதலை குறித்து பேரறிவாளன் நெகிழ்ச்சி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்த நிலையில், தனது தாய் அற்புதம் அம்மாள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி இது என பேரறிவாளன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை இனிப்புகள் பரிமாறி அவர்கள் கொண்டாடினார். இதை தொடர்ந்து ஜோலார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன்,’நல்லவர்கள் வாழ வேண்டும், கெட்டவர்கள் வீழ வேண்டும் என்பதுதான் இயற்கையின் நீதி. இதைதான் வள்ளுவரும் கூறுகிறார். உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் எனக்கு ஆதரவு அளித்தனர், என் மீது அன்பு செலுத்தினர்.

தங்கள் வீட்டில் உள்ள ஒரு பிள்ளையாக என்னை நினைத்தார்கள். இதற்கு முக்கிய காரணம் என் அம்மா. அவரின் போராட்டம், தியாகம் ஆகியவையே காரணம். நிறைய புறக்கணிப்பு, வலி, வேதனை, அவமானங்களை அவர் சந்தித்தார். எங்கள் பக்கம் இருந்த நியாயம்தான் வலிமை கொடுத்தது. தனது அம்மாவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றிதான் இது.

அரசின் ஆதரவையும் மக்கள் ஆதரவையும் எனக்கு கிடைக்க செய்தது தங்கை செங்கொடியின் தியாகம். பின்னர் என் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்துவிட்டதாக தியாகராஜன் ஐபிஎஸ் அளித்த பேட்டி. உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாம்ஸ் அவர்களின் கட்டுரை, பேட்டி ஆகியவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

மரண தண்டனையே கூடாது என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறேன். ஊடகங்கள் இல்லாவிட்டால் உண்மைகள் வெளிவந்திருக்காது, இந்த அளவு மாற்றம் ஏற்பட்டிருக்காது. அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றியை தெரிவித்துகொள்ள விரும்புகிறேன். சுதந்தர காற்றை சுவாசிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.