முல்லையில் சட்டவிரோத மீன்பிடியை நிறுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியை நிறுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(19) இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலானது முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு அமைய முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு, நந்திக்கடல், கொக்கிளாய், சாலை களப்பு பகுதிகள் உள்ளிட்ட முல்லைத்தீவு கடற்பிரதேசத்திலும் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலேயே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும் இக் கலந்துரையாடலில் சுருக்கு வலை பாவித்து மீன்பிடித்தல், வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், டைனமற் பாவித்து மீன்பிடித்தல் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட தொழில்களை நிறுத்துவது தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், கடற்படை உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், இராணுவத்தினர், கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளர், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.