“மதுரா கிருஷ்ண ஜென்மபூமியில் உள்ள மசூதியை அகற்றக் கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்கலாம்’

உத்தர பிரேதச மாநிலம், மதுராவில் கட்ரா கேசவ்தேவ் கோயில் வளாகத்தில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியை அகற்ற வேண்டும் என்ற மனுவை விசாரணைக்கு ஏற்கலாம் என்று மதுரா மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இது தொடர்பான மனுவை கீழமை சிவில் நீதிமன்றம் கடந்த 2020}ஆம் ஆண்டு தள்ளுபடி செய்திருந்தது.

மதுராவில் உள்ள 13.37 ஏக்கர் பரப்புள்ள நிலம் ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி அறக்கட்டளைக்கு சொந்தமானது என்று லக்னெüவைச் சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி உள்ளிட்ட 7 பேர் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த நிலத்தில் கட்ரா கேசவ்தேவ் கோயில் அமைந்துள்ளது. இது ஸ்ரீ கிருஷ்ணர் ஜென்மபூமி கோயிலாகும். அந்த கோயில் வளாகம் உள்ள நிலத்தின் ஒரு பகுதியில் ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ளது. இந்த மசூதியை அகற்றிவிட்டு நிலத்தை ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி அறக்கட்டளையிடம் திரும்ப அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இதனை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று சிவில் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மனுதாரர்கள் மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தனர். இது தொடர்பான விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மே 5}ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கலாம் என்ற தீர்ப்பை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ராஜீவ் பார்தி வியாழக்கிழமை வெளியிட்டார்.

இது குறித்து அரசு தரப்பிலான மாவட்ட சிவில் வழக்குரைஞர் சஞ்சய் கெüர் தெரிவித்ததாவது: குறிப்பிட்ட நிலத்தில் மனுதாரர்களுக்கு உரிமை உள்ளது என்று மாவட்ட நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். எனவே கீழமை நீதிமன்றம் முறையான வழக்காகப் பதிவு செய்து அதனை விசாரிக்க வேண்டும் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கீழமை சிவில் நீதிமன்றம் இந்த மனுவை முறைப்படி விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.