அதிரடியாக குறைந்த பெட்ரோல் டீசல் விலை.. இன்று எவ்வளவு தெரியுமா?
பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதை தொடர்ந்து அவற்றின் விலை குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றம் செய்து வருகின்றன. சமீப காலமாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு 110 ரூபாயை கடந்தும் டீசல் லிட்டருக்கு 100 ரூபாயை கடந்தும் விற்பனையானது சாமானிய மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
விலைவாசியும் கடுமையாக உயர்ந்தது, எனவே எரிபொருள் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6ம் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதை தொடர்ந்து பெட்ரோல் மீது ரூ.9.50ம், டீசல் மீது ரூ.7ம் விலை குறையும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 8.22 ரூபாயும் டீசல் லிட்டருக்கு 6.70 ரூபாயும் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், மதுரையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.21 காசுகளுக்கும் ஒரு லிட்டர் டீசல் 94.84 காசுகளுக்கும் விற்பனையாகிறது.