ஆரியகுளம் வெசாக் விவகாரம்: யாழ். மாநகர சபையைக் கலைப்பதா? – ஆளுநர் தீவிர ஆலோசனை.
யாழ். ஆரியகுளத்தில் வெசாக் தோரணங்களை அமைப்பதற்கு அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தீர்மானித்துள்ளார் என்று நம்பகரமாக அறியமுடிகின்றது. இது தொடர்பில் கடந்த சில தினங்களாக அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
ஆரியகுளத்தில் வெசாக் அலங்காரங்களை அமைப்பதற்கு படையினர், யாழ். மாநகர சபையிடம் அனுமதி கோரியிருந்தனர். ஆரியகுளத்தில் எந்தவொரு மத அடையாளங்களுக்கும் இடமளிப்பது இல்லை என்று மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததால் அனுமதி வழங்க முடியாது என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வடக்கு மாகாண ஆளுநர், வெசாக் அலங்காரங்களை அமைக்க அனுமதி வழங்கவேண்டும் என்று மாநகர சபை பதில் மேயரிடம் நேரடியாகக் கோரியிருந்தார். அதற்கு அமைவாக இணையவழியில் மாநகர சபை உறுப்பினர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. அதன்போது முன்னரே அனுமதி கோரவில்லை என்றும், வேண்டுமென்றே வெசாக் அன்று அனுமதி கோரியதாகவும் குறிப்பிட்ட உறுப்பினர்கள் எழுத்துமூலம் அனுமதி கோரினால் ஆராயலாம் என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தனது உத்தரவை உதாசீனப்படுத்தியதால், மாநகர சபையை கலைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார். அதற்குரிய வழிகாட்டல்கள் கொழும்பைத் தளமாகக் கொண்ட சில தரப்புக்களால் வழங்கப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.
அதற்கு அமைவாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஒன்றை முன்னெடுக்க ஆளுநர் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகின்றது. இதற்காக சில ஓய்வுபெற்ற நீதிபதிகளையும் அவர் அணுகியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.