சிறுநீரக, புற்றுநோயாளிகளுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு.
சிறுநீரக மற்றும் புற்றுநோயாளிகளுக்கு தேவையான பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது இவ்வாறான நோயாளிகள் பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஒன்றியத்தின் தலைவரான அஜித் திலகரத்ன தெரிவித்தார்.
ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு பஞ்சு அல்லது பிளாஸ்டர் போன்றவற்றை கூட வைத்தியசாலைகளில் காண முடியாத நிலை எதிர்காலத்தில் உருவாகும் என அவர் எச்சரித்தார்.
சிறுநீரக நோயாளிகளின் இரத்த சிவப்பணுக் களை அதிகரிக்கப் பயன்படுத்தப் படும் மருந்துகளின் கையிருப்பு குறைந்து வருவதாகவும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான மருந்துகளும் தீர்ந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மருந்துகள் இல்லாமல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் எதிர்பார்க்கப்படும் முடிவுகளை உறுதி செய்ய முடியாது.
புற்றுநோயாளிகள் வாய்வழி சிகிச்சை மற்றும் ஏனைய சிகிச்சைகளை கடுமையான அட்டவணையில் தொடர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக சிகிச்சையை ஆரம்பித்த நோயாளர்கள் மிகவும் அவல நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பல மருந்துகளின் இருப்புகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவையான கரையக்கூடிய இன்சுலின் இருப்புகள் தற்போது தீர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்க மருந்தாளர் சங்கம், ஜனாதிபதி, முன்னாள் பிரதமர், முன்னாள் நிதியமைச்சர், சுகாதார அமைச்சு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முன்னரே அறிவித்திருந்தும் இவ்வாறானதொரு நிலை ஏற்படும் எனத் தெரிவித்திருந்தும் அதிகாரிகள் கவனம் செலுத்தத் தவறியதாகவும் அவர் தெரிவித்தார்.
துரித நடவடிக்கை எடுக்கத் தவறியதன் விளைவாக நோயாளிகள் கடுமையான சுமைகளை எதிர்கொள்கின்றனர். அதே நேரத்தில் நாட்டின் மருத்துவமனை அமைப்பு செயற்பட முடியாமல் முழு சுகாதாரத் துறையின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.