தடைப்பட்ட மின்சாரம் மீண்டும் வழமைக்கு! : மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குக

அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்கிறார் பொது முகாமையாளர்

நாடு முழுவதும் இன்று பிற்பகல் 12.45 மணி முதல் மின்சாரத் தடை ஏற்பட்டிருந்த நிலையில் இரவு 7 மணி முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கெரவலப்பிடிய உப மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரதான மின் விநியோகக் கட்டமைப்பு செயலிழந்தது எனவும், இதனால் நாடு பூராகவும் மின் தடை ஏற்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மின்சாரத் தடைக்கான காரணம் கண்டறிந்து அமைச்சுக்கும், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கும் உரிய வகையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும், அதனடிப்படையில் எதிர்காலத்தில் இவ்வாறான விடயம் இடம்பெறாத வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குக
– மின்சார சபைக்கு உத்தரவு

நாட்டில் இன்று ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பில் மூன்று நாட்களுக்குள் ஆரம்ப கட்ட அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு, இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மின்சார சபையின் பொது முகாமையாளருக்கு இன்று கடிதமொன்றை எழுதியுள்ள, ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரம் தொடர்பான பணிப்பாளர் நலின் எதிரிசிங்க இவ்வாறு கோரியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இன்று 12.45 மணி முதல் நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டதன் மூலம், பொருளாதார மற்றும் நிறுவனங்களின் நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்ததோடு, மக்களின் அன்றாட நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்துக்கு அமைய, ஒருங்கிணைந்த வகையில், திறனாகவும் சிக்கனமாகவும் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க வேண்டியது அவசியமாகும்.

அத்துடன், மின்துண்டிப்புக்கான அவசியம் ஏற்படும்போது, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன் அனுமதியுடன் பொதுமக்களுக்கு முன்னறிவிப்புடன் மின்சாரத் துண்டிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அவசியமாகும்.

மேலும், குறித்த அனுமதிப்பத்திரத்துக்கு அமைய, முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்படும் இவ்வாறான மின்சாரத் தடை தொடர்பில், ஆணைக்குழுவுக்கு ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதற்கமைய, நாட்டில் இன்று ஏற்பட்ட மின்சாரத் தடைக்கான காரணம் மற்றும் அதனை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் அடங்கிய ஆரம்பகட்ட அறிக்கையை 3 நாட்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன், ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்துக்கு அமைய, மின்சாரத் தடை மற்றும் இவ்வாறான தடை எதிர்காலத்தில் ஏற்படுவதை தடுப்பதற்கு எடுத்துள்ள விடயங்கள் அடங்கிய முழு அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்” – என்றுள்ளது.

Comments are closed.