உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்க இடம் தர வேண்டும்.. பெற்றோர்கள் கோரிக்கை
உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த மாணவர்கள் போரால் தாய்நாடு திரும்பியுள்ள நிலையில், அவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே மருத்துவம் படிக்க இடம் தர வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் அங்கு பல்வேறு இடங்களில் மருத்துவம் பயின்று வந்த மாணவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்திற்கு திரும்பினர்.
மீண்டும் உக்ரைன் செல்வதற்கான சூழல் இல்லாத நிலையில், இந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர் பெற்றோர். தமிழ்நாட்டில் உள்ள 69 மருத்துவக் கல்லூரிகளில் ஒரு ஆண்டு வகுப்புக்கு 5 பேர் வீதம் கூடுதலாக இடம் ஏற்படுத்தி தந்தால் அனைவரும் தமிழகத்திலேயே மருத்துவம் படிக்க முடியும் என்கிறார் உக்ரைன் மருத்துவ மாணவர்கள் பெற்றோர்கள் அமைப்பின் தலைவர் குணசேகரன்.
இந்தியா வந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில், ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களை கற்று கொள்வது கடினமாக இருப்பதாகவும், அடுத்த செமஸ்டர் கட்டணத்தை கட்ட வேண்டுமா இல்லையா என தெரியாமல் குழம்பி போயிருப்பதாகவும் கூறுகிறார் முதலாம் ஆண்டு மாணவி ஜனனி.
உக்ரைன் மாணவர்கள் விவகாரம் தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியனிடம் கேட்ட போது, மத்திய அரசு தான் இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் உக்ரைனைப் போலவே மருத்துவ பாடத்திட்டம் கொண்ட மற்ற நாடுகளில் அவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் அவர்களை சேர்த்துக் கொள்ள இயலாது என்றும் கூறினார்.
மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு, உக்ரைன் மாணவர்கள் விவகாரத்திலும் ஒரு நல்ல முடிவை எடுக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் மாணவர்களும் அவர்தம் பெற்றோரும்.